வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (01/02/2018)

கடைசி தொடர்பு:07:17 (01/02/2018)

பேருந்துக் கட்டண விவகாரம்..! முதலமைச்சர் மீது நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு

முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய அமைச்சர்கள் ஆயிரம் பேருந்துகளை வாங்கி விட்டார்கள். அதனால்தான் அரசுப் போக்குவரத்துக் கழகத்தை நஷ்டமாக்கி அதை தனியார்மயமாக்க முயற்சி செய்வதாக நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டினார்.

முதலமைச்சர்

டி.டி.வி.தினகரன் அணி சார்பில் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று விருதுநகரில் நடைபெற்றப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வால் பொதுமக்கள், மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். 120 சதவிகிதம் கட்டணம் உயர்த்திவிட்டு நயா பைசா அளவில் குறைத்துள்ளார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், கழுதை மேல் ஏற்றிய சுமையை குறைக்க அதன் சுமையிலிருந்து சிறு துரும்பை எடுத்து கீழேபோட்டு ஏமாற்றுவது போல இருக்கிறது. ஒருநாளைக்கு 17 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதல் செய்கிறார்கள். 

இதற்கான மத்திய அரசின் வரியைக் குறைக்க கோரிக்கை வைக்க வேண்டியதுதானே. ஏன் செய்யவில்லை? போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் ஏகப்பட்ட அதிகாரிகள், தேவையற்ற செலவுகள், இதைக் குறைக்க முயற்சி எடுத்தார்களா? காரணம் போக்குவரத்துக்கழகத்தை நஷ்டமாக்கி அதை அப்படியே தனியாருக்கு விடுவதுதான் அவர்கள் திட்டம். எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய அமைச்சர்கள் ஆயிரம் பேருந்துகளை வாங்கிவிட்டார்கள். அது தற்போது உள்ள அதே பெயர்களில் ஓடும். ஆனால், ஓனர் இவர்கள்தான். இதை நான் இங்கு உறுதியிட்டுச் சொல்கிறேன். ஓ.பி.எஸ். மத்திய அரசின் ஆள். அவர் இப்போது வேஷம் போடுகிறார். ஊடகங்களையும், உலகத்தையும் நம்ப வைக்கப் பார்க்கிறார். அவர் மத்திய அரசுக்கு எதிராகப் பேசுவதை யாரும் நம்ப மாட்டார்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க