வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (01/02/2018)

கடைசி தொடர்பு:08:50 (01/02/2018)

இது தமிழரின் பொன்விழா - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பெருமிதம்

திருப்பூரில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியின் ஒருபகுதியாக, திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டுக் கூட்டம்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில், தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ' 'தமிழ்நாடு' என்று அறிஞர் அண்ணா அறிவித்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படி தமிழ்நாடு என்று அறிவித்ததற்கான பொன்விழா ஆண்டாக மட்டுமல்ல, தமிழ் மொழி, கலை, பண்பாடு ஆகிய மூன்றும் ஓர் உன்னதமான உயர் நிலையை அடையும் வகையில், தமிழர்களுக்கான பொன்விழா ஆண்டாகவும் இந்த ஆண்டு இருக்கப்போகிறது. இன்றைக்கு, உலகம் முழுவதும் தமிழின மக்கள் ஒன்பதரை கோடி பேர் இருக்கிறோம். எனவே, தமிழை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்வதற்காக, 'தமிழ் வளர் மையம்' என்ற அமைப்பை இந்த அரசு உருவாக்க இருக்கிறது. 1 லட்சத்துக்கும் மேல் தமிழர்கள் வாழக்கூடிய 17 நாடுகளில், தமிழ் மொழியைக் கற்றுக்கொடுப்பதற்கான ஆசிரியர்களை நியமிக்க இருக்கிறோம். காஷ்மீரில் உள்ள சில பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தமிழ் கற்றுத் தரப்பட இருக்கிறது.

சமீபத்தில், சென்னையை இசை நகரமாக அங்கீகரித்து, யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. ஒரு மாதத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கச்சேரிகள் நடைபெறும் நகரமாக சென்னை விளங்குகிறது. விலைமதிப்பற்ற தொல்லியல் பொருள்கள் கிடைக்கக்கூடிய மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. தற்போது, தமிழ்நாட்டில் 36 அருங்காட்சியகங்கள் இருக்கின்றன.அவை அனைத்தையும் உலகத் தரத்தில் மாற்ற இருக்கிறோம்.

திருப்பூர் போன்ற அருங்காட்சியகங்கள் இல்லாத மாவட்டங்களிலும் புதிதாக அருங்காட்சியகங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்க இருக்கிறோம். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தின் தனித்தன்மையை நாம் விரைவில் மீட்டெடுப்போம். உலகத்தில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து, பழந்தமிழர் பண்பாட்டின் கண்காட்சியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன' என்றார்.