வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (01/02/2018)

கடைசி தொடர்பு:10:20 (01/02/2018)

மிரட்டலுக்கு அஞ்சாத சிறுமி! - போலீஸில் சிக்கிக்கொண்ட ஆசிரியர்

எட்டு வயதே ஆன சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த ஓய்வுபெற்ற ஆசிரியரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ளது பிலாவிடுதி என்ற கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர், ராமலிங்கம். இவர், ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். அதே ஊரைச் சேர்ந்த 8 வயது சிறுமி கண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ராமலிங்கம், கண்மணியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுமியின் பெற்றோர் நேற்று (31.01.2018) ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மகளிர் போலீஸார் கண்மணியிடம் விசாரித்துள்ளனர்.

ஒரே தெருவைச் சேர்ந்த அவரிடம், தினமும் டியூஷனுக்குச் சென்று வந்திருக்கிறார் கண்மணி. நேற்று, வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்தி, அந்த ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்றும், அத்துடன் `யாரிடமும் இதுபற்றி சொல்லக்கூடாது' என்று   மிரட்டினார் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், ஆசிரியரின் மிரட்டலுக்குப் பயப்படாமல், ஆசிரியர் தன்னிடம் தப்பாக நடக்க முயன்றதைத் தனது பெற்றோரிடம் சொன்னதாகவும், இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து, போலீஸில் புகார் தெரிவிக்க முடிவெடுத்தது வரை அந்தச் சிறுமி தன்னிடம் விசாரித்த மகளிர் போலீஸாரிடம் கூறியிருக்கிறாள். கண்மணி கூறியதில் உண்மையின் முகாந்திரம் இருந்ததால், உடனடியாக ராமலிங்கத்தைக் கைதுசெய்து மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தினர். அவரின் உத்தரவையடுத்து போலீஸார் ராமலிங்கத்தை திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம், கறம்பக்குடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.