வெளியிடப்பட்ட நேரம்: 09:23 (01/02/2018)

கடைசி தொடர்பு:16:01 (09/07/2018)

'எலே, இளவட்டங்களா...வாய்தான் தெம்பும் தும்புமா இருக்கு!’ - கலகலத்த சேந்தன்குடி பெருசுகள்

`இளவட்டக்கல்லு இன்னும் இளவட்டமாத்தான்  இருக்கு. ஆனா பசங்கத்தான் கல்லைத் தூக்கமுடியாத கிழடு ஆயிட்டாங்க' என்று கிண்டலடித்த கிராமத்துப் பெரியவர்களே வாயடைத்துப்போகும் அளவுக்கு இளைஞர்கள் 'கெத்து' காட்டினார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடியில் உள்ள ஜெயாநகரத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வழுக்கு மரம் ஏறுதல், இளவட்டக்கல்லைத் தூக்குதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட உடல் பலத்தைக் காட்டும் பாரம்பர்ய விளையாட்டுகள்  நேற்று மாலை நடந்தது. இதில் கலந்துகொண்டு தங்கள் புஜ பராக்கிரமத்தை  ஊரறியச் செய்ய பல இளைஞர்கள் ஆர்வத்துடன் முன்வந்தனர். கிராமத்துப் பெரியவர்களும் பார்வையாளராக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தங்களது மலரும் நினைவுகளை வெற்றிலை வாய் மணக்க மணக்கப் பகிர்ந்துகொண்டார்கள்.

கயிறு இழுத்தல் போட்டியில் நடுத்தர வயதுள்ளவர்களும் இளைஞர்களும் போட்டியிட்டார்கள். அதில், மிகச் சுலபமாக இளைஞர்கள் ஜெயித்துவிட்டார்கள். அடுத்து, வழுக்கு மரம் ஏறுதல் போட்டியிலும் ஓரளவுக்குத் தேறிவிட்டார்கள். ஆனால், உண்மையான போட்டியே இளவட்டக்கல்லைத் தூக்குவதில்தான் இருந்தது. தனிநபர் போட்டி என்பதால், எதிர்பார்ப்பும் எகிடுதகிடாக எகிறிக்கிடந்தன. இந்தப் போட்டியில் மட்டும் பாராட்டோ, நக்கலோ... ஒட்டுமொத்த கிராமமும் ஒன்றுகூடிவிடும். கிராமத்து விளையாட்டுகளின் ஹீரோ என்று இந்த இளவட்டக்கல் போட்டியை விட்டுக்கொடுக்காமல் பெருசுகள் சிலாகிப்பார்கள்.

80 கிலோ எடை உள்ள அந்தக் கல்லைத் தூக்க,  ஜெய நகர இளைஞர்கள் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் முன்வந்தார்கள். அதற்குக் காரணம், அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை. எத்தனை பேர் முறைப்படி கல்லைத் தூக்கி அடிக்கிறார்களோ, அத்தனை நபர்களுக்கும் தலா 1001 ரூபாய் பரிசாக விழா கமிட்டியினர் அறிவித்திருந்தார்கள். கல்லைக் கட்டிப்பிடித்து ஒரே மூச்சில் தூக்கி, இடதுபுற தோள்பட்டையில் சில நிமிடங்கள் நிறுத்தி, பின்பக்கமாக கல்லைத் தள்ளிவிட வேண்டும் என்பது விளையாட்டின் விதி. தூக்கிவிடலாம் என்று நம்பி வந்த இளைஞர்கள் பலரும் மூச்சுப்பிடிப்பதின் சூட்சுமம் அறியாமல்,கல்லை இருகைகளால் அணைத்துக் தூக்கும் லாகவமும் புரியாமல் கோட்டைவிட்டார்கள். அவர்களுக்கு, முழங்காலுக்கு மேல் கல் ஏறவே இல்லை. பத்து இளைஞர்கள், நெஞ்சு வரைக்கும் கொண்டுவந்து  தோல்வியைத் தழுவினார்கள். அப்போதெல்லாம்  கூடிநின்ற பெருசுகள், 'எலே, இளவட்டங்களா..வாய்தான் தெம்பும் தும்புமா இருக்கு.  கல்லைத்தூக்கத் ஒடம்புல தெம்பு இல்லியேப்பா' என்று நக்கல் விட்டார்கள். இந்தப் போட்டியில், நான்கு இளைஞர்கள் மட்டும் கல்லைத் தூக்கி தோள்மீது கொண்டுவந்தார்கள். ஆனால், கல்லை நிறுத்த முடியாமல் தொப்பென்று பின்பக்கமாக நழுவவிட்டார்கள். ஆனாலும் அந்த நான்கு பேரும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1001 பரிசாக வழங்கப்பட்டது. கிராமத்துப் பெருசுகள் அந்த இளைஞர்களைத் தோள்தட்டி, கைத்தட்டிப் பாராட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த இயற்கை விவசாயி தங்க கண்ணன் என்பவரிடம் பேசினோம். 'இயற்கை விவசாயத்தை மட்டுமல்ல, நமது பாரம்பர்ய கிராமத்து விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சிதான், இதுபோன்ற போட்டிகளை நடத்துவதற்கான காரணமே. இன்றைக்கு வெறும் காட்சிப் பொருளாகவே பல ஊர்களில் இளவட்டக்கல்  கிடக்கிறது. இது வேதனையைத் தருகிறது.இந்த நிலைமை மாற வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற விளையாட்டுகளை பொங்கல்,தைப்பூசம், சூரம்ஸ்ஹாரம் என்று பண்டிகைக் கால சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நடத்துகிறோம்' என்றார்.