`பாக்கெட்டில் எவ்வளவு இருக்கு..!’ - மாட்டுக்கு புல் ஏற்றிவந்தவரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ஏட்டு

காவலர், அருவருக்கத்தக்க வகையில் பேசும் வீடியோ ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைத் தாண்டி தமிழகம் முழுவதும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மிகவும் அநாகரிகமாக நடந்துகொள்ளும் காவலர்களின் செயல், பல்வேறு தரப்பினர் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோகுறித்து நாம் விசாரித்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவியாளர் சரவணன், ஏட்டு ராஜமாணிக்கம் மற்றும் சிறப்பு காவல் படையினர் இரண்டுபேர் என்று தகவல் கிடைத்தது. 

காவலரின் பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சர்க்கிளில் உள்ள மத்திகிரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவிக் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில், கடந்த குடியரசு தினத்தன்று, கர்நாடக தமிழக எல்லைப் பகுதியில் உள்ள பூனப்பள்ளி கிராமத்தில் வாகன தணிக்கை செய்த காவலர்கள், மாட்டுக்குப் புல் ஏற்றிவந்த லாரி டிரைவரிடம் மாமூல் கேட்டு தொந்தரவுசெய்கின்றனர். லாரி டிரைவர், 'சார் சாப்பாட்டுக்குக்கூட காசு இல்லை' என்று கெஞ்சுகிறார். டேய், நீ எந்த ஊர் என்று விடாமல் கேட்கும் ஏட்டு ராஜமாணிக்கம், நீ அந்த ஊர் காரனா... என்று மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார். சரி பாக்கெட்டில் எவ்வளவு இருக்கு என்று கேட்கிறார். 50 ரூபாய் என்கிறார். சரி, அங்கே வைத்துவிட்டு போ... என்று அனுப்புகிறார். அதை அப்படியே செல்போனில் வீடியோ எடுத்த லாரி டிரைவர், வாட்ஸ்அப்பில் பகிர்ந்துவிடவே, தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது. 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது., ’தமிழகம் முழுவதும் வாகனத் தணிக்கைசெய்து தினந்தோறும் ஒரு காவல் நிலையத்துக்குக் குறைந்தது 100 வழக்குகள் வரை பதிவுசெய்ய வேண்டும் என்று அரசு வாய்மொழி உத்தரவு போட்டுள்ளது. இதனால், சரக்கு லாரிகள் மற்றும் டூவீலரில் செல்பவர்களிடம் ஆர்.சி புத்தகம், ஹெல்மெட், இன்ஷூரன்ஸ், லைசென்ஸ் இருக்கா என்று வாகன ஓட்டிகளிடம் பரிசோதனைசெய்து, இல்லையென்றால் வழக்குப் போட்டு அபராதம் வசூல் செய்துவருகிறோம். இதில் சில காவல் அதிகாரிகள் கோர்ட் போறியா... ஃபைன் கட்டுறியா... என்று அடாவடி வசூல் செய்துவிடுகின்றனர். இதனால், எங்களைப் போன்ற காக்கிகளுக்கும் சேர்த்தே கெட்டபெயர். பொதுமக்களிடம் கெட்டபெயர் வாங்க எங்களுக்கு மட்டும் ஆசையா என்ன..?’ என்கின்றனர். எப்படி இருந்தாலும் குற்றவாளிகளிடம் நடந்துகொள்வதைப்போன்றே பொதுமக்களிடமும் நடந்துகொள்வது காவலரின் ஒழுங்கீனமே. 

சம்பந்தப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனையும் ஏட்டு ராஜமாணிக்கத்தையும் ஏஆர் பிரிவுக்கு மாற்றம்செய்துள்ளனர், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஓசூர் டி.எஸ்.பி., ராஜேந்திரனிடம் விசாரணை அறிக்கை கேட்டுள்ளார், கிருஷ்ணகிரி எஸ்.பி மகேஷ்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!