வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (01/02/2018)

கடைசி தொடர்பு:19:15 (01/02/2018)

கர்நாடகாவில் கிழித்தெறியப்பட்ட எம்.ஜி.ஆர் பேனர்!- ரசிகர்கள் அதிர்ச்சி

கர்நாடகாவில், எம்.ஜி.ஆருக்கு வைக்கப்பட்டிருந்த பேனரை கன்னடர்கள் கிழித்தெறியும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரபரப்புடன் வலம் வந்துகொண்டிருக்கிறது.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி நீர்ப் பங்கீடுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக அனுமதி கேட்டு, சமீபத்தில் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தச் சூழலில், இந்த வீடியோ வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, இந்திரன் நகர் பகுதியில் உள்ள அல்சூர் லெட்சுமி புரம் பகுதியில், பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஐந்து விதத் தோற்றங்களில் காட்சிதரும் எம்.ஜி.ஆர் உருவங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.  மேல்பகுதியில், கன்னடம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எம்.ஜி.ஆரை வாழ்த்தி வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அங்கு வந்த கன்னடர்கள் சிலர், "எம்.ஜி.ஆரை நாங்கள் மதிக்கிறோம். அவர் ஒரு மலையாளி. அவருக்கு கர்நாடகாவில் என்ன வேலை. தமிழ்நாட்டில் முதல்வராக இருந்திருக்கிறார். அங்கு வைத்து கடவுளாகக்கூட கும்பிட்டுக்கொள்ளுங்கள். எங்களுக்கு அதில் அபிப்ராய பேதம் ஏதுமில்லை. ஆனால், கர்நாடகாவில் அவருடைய படங்களை வைக்கக்கூடாது. இங்கு, ராஜ்குமாருக்கு மட்டும்தான் பேனர் வைக்க வேண்டும். கர்நாடகா சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் போர்டு வைக்க வேண்டும். ஜெய் கர்நாடகா மாதா. ஜெய் கர்நாடகா மாதா" என்றுக் கூறிக்கொண்டு, அங்கிருக்கும் இளைஞருக்கு உத்தரவிடுகிறார்கள். அவர், கையில் வைத்திருக்கும்  கத்தியால், அந்த பேனரைக் கிழித்து எறிகிறார். சிறிது நேரத்தில், அவருக்குத் துணையாக இன்னொருவரும் இணைந்துகொள்கிறார். இதை, அங்கிருந்தவர்கள் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொள்கிறார்கள். இந்த வீடியோ, தற்போது வைரலாகிவருகிறது.