பூச்சிமருந்தால் 3 மாவட்டங்களை அச்சுறுத்தும் புற்றுநோய்!

கேரளாவில், ஒரே ஆண்டில் 1251 டன் பூச்சிமருந்து தெளிக்கப்பட்டிருப்பது கவலையளிப்பதாக, கேரளா விவசாயத்துறை அமைச்சர் வி.எஸ்.அனில் குமார், கேரள சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 'இனி, பூச்சி மருந்து தெளிப்பது குறைக்கப்பட்டு, கேரளாவில் இயற்கை வேளாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார். 

பூச்சிமருந்து

கேரள சட்டமன்றத்தில் நேற்று பேசிய அனில்குமார், `இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், கேரள வேளாண்மைத் துறை சார்பில், 1099 இடங்களில் பூச்சிமருந்து கலப்பில்லாத இயற்கைக் காய்கறிகளும் பழங்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது' எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், `கேரளாவில் ஏற்கெனவே 118 இயற்கை அங்காடிகள் செயல்பட்டுவருகின்றன. கூடுதலாக, 317 இயற்கை அங்காடிகள் வேளாண் துறையின் சார்பில் ஏற்படுத்தப்படும். பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் பயன்படுத்துவது கவலையளிக்கிறது. கேரளாவில், 2015-ம் ஆண்டில் மட்டும் 1251 டன் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பூச்சிமருந்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட, குட்டநாடு பகுதியுள்ள மூன்று மாவட்டங்களில், புற்றுநோயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கேரளா முழுவதும் பூச்சிமருந்தின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்திட, கேரள அரசு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 

வேளாண் துறையின் கீழ் செயல்படும் அமலாக்கப்பிரிவு பலப்படுத்தப்பட்டு, உணவுப் பாதுகாப்புத்துறையுடன் இணைந்து, வெளிமாநிலங்களிலிருந்து கேரளாவுக்குக் கொண்டுவரப்படும் காய்கறிகளையும், உள்நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகளையும், பழங்களையும் சோதனைசெய்யப்படும்" என அனில் குமார் தெரிவித்துள்ளார். 

பூச்சிமருந்து

இதன்மூலம், காய்கறிச் சந்தையில் விற்பனைசெய்யப்படுவதற்கு முன்பே பரிசோதனைசெய்து, ஆரோக்கியமான உணவுப்பொருள்கள் கிடைக்க, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கேரளா விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பதைப்பார்த்து, தமிழக அரசும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!