வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (01/02/2018)

கடைசி தொடர்பு:13:30 (01/02/2018)

’உடன்பிறப்புகளுடன் களஆய்வு’ - மாவட்ட வாரியாக நிர்வாகிகளிடம் நேர்காணலைத் தொடங்கிய ஸ்டாலின்!

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ’உடன்பிறப்புகளுடன் களஆய்வு’ என்ற பெயரில், மாவட்டவாரியாக நிர்வாகிகளின் நேர்காணலை சென்னையில் இன்று தொடங்கியுள்ளார். 

தி.மு.க-வின் தலைமைமீது தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தொடர் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மாவட்டவாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்களிடம் கருத்துகளைக் கேட்க இருக்கிறார், ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தொடங்கியுள்ள இந்த நேர்காணலில், நிர்வாகிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க, தீர்வுகாணும் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நேர்காணலின் தொடக்கமாக, பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர், ஸ்டாலினுடன் கலந்துகொண்டனர். இந்த ஆய்வு, இன்று (1.2.2018) தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம் என்பதால், மாவட்டவாரியாகக் கட்சியைப் பலப்படுத்தும் வேலையை முடுக்கிவிடவே இந்த நேர்காணல் என்கிறார்கள் தி.மு.க.வினர். கட்சியில், மாவட்டவாரியாக இருந்த உள்கட்சிப் பூசலைக் களையும் விதமாக, இதேபோன்றதொரு நேர்காணலை, கடந்த 2005-ம் ஆண்டு கருணாநிதி நடத்தினார். அதேபோல இந்த முறை நேர்காணலை நடத்தி, உள்கட்சிப் பூசலுக்கு முடிவுகட்டும் திட்டத்தில் ஸ்டாலின் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.