அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு...!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியத் துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்ல இருக்கிறது தமிழக அரசு. இதற்காக மாணவர்களைத் தேர்வுசெய்யும் பணியை ஆரம்பித்திருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித் துறை

School Girls

வெளிநாட்டுக்குச் சுற்றுலாவுக்கு மாணவர்களைத் தேர்வுசெய்ய, பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், தொடக்கக் கல்வி இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர், நாட்டுநலப் பணித் திட்டத்தின் இணை இயக்குநர், சென்னை அரசு கவின் கல்லூரி முதல்வர், தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வர், அண்ணா பல்கலைக்கழக அறிவியல் துறைத் தலைவர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரில் ஒருவர் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஒருவர் என 10 பேர் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழு அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் என ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவர்கள் என்ற வகையில் 100 மாணவர்களைத் தேர்வுசெய்யும். இந்தத் திட்டத்துக்காக, தமிழக அரசு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

மாணவர்களின் தேர்வுகுறித்து, இந்தத் திட்டக் குழுவின் உறுப்பினர் செயலராக உள்ள நாட்டுநலப் பணித் திட்டத்தின் இணை இயக்குநர் செல்வகுமாரிடம் பேசினோம்.

“எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை, இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வுசெய்ய உள்ளோம். மாணவர்களைத் தேர்வுசெய்வதில் எந்தவிதமான இடையூறும் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் கலை விழா நடந்து முடிந்திருக்கிறது. இதில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்கள், மாநில அளவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். அதிலும் சிறப்பாகச் செயல்படுபவர்களைத் தேர்வுசெய்ய உள்ளோம். ஏற்கெனவே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவர்களின் பட்டியலை வழங்க, மாவட்ட அலுவலகங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். இந்தப் பட்டியலில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பாஸ்போர்ட் வசதி, பெற்றோரின் விருப்பம், எந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றனர் போன்ற விவரங்களையும் கேட்டிருக்கிறோம். 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவில் தேர்வாகும் மாணவர்கள், ஜப்பான், சீனா, தென்கொரியா, அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கும், கலைப் பிரிவில் தேர்வாகும் மாணவர்கள் சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, கிரீஸ், எகிப்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளுக்கும், இலக்கியக் குழுவில் தேர்வாகும் மாணவர்கள் ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே, சுவீடன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. மாணவர் குழுவுடன், இரண்டு ஆசிரியர்களும், உயர் அதிகாரி ஒருவரும் உடன் செல்வர். குழுவில் மாணவிகள் இடம் பிடித்தால், அந்தக் குழுவில் ஓர் ஆசிரியையும் உடன் செல்வார்.

மாணவர்கள், வெளிநாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், அறிவியல் ஆய்வகங்கள் போன்றவற்றை பார்வையிடவும், வெளிநாட்டு அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடவும் ஏற்பாடு செய்துவருகிறோம். மே மாதம் முதல் வாரத்தில் மாணவர் குழு வெளிநாட்டுக்குப் பயணம் செய்யும் வகையில் திட்டமிட்டுச் செயல்படுகிறோம்" என்றார். 

வெளிநாட்டுச் சுற்றுலா திட்டம், மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் என நம்புவோம்!

 

சென்னையில் நடக்கும் CSK போட்டியை நேரில் காண க்ளிக் செய்க...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!