வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (01/02/2018)

கடைசி தொடர்பு:15:12 (01/02/2018)

`இந்தி வெறுப்பு உணர்வாளர்களின் ஆதிக்கத்தால் மாணவர்கள் அவதி' - முதல்வருக்கு அர்ஜூன் சம்பத் கடிதம்!

தமிழகத்தில் மும்மொழி கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கடிதம் அனுப்பியுள்ளார்.

அர்ஜூன் சம்பத்


இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமிக்கு அர்ஜூன் சம்பத் எழுதியுள்ள கடிதத்தில், 'பாரத நாடு முழுவதும் மும்மொழி கல்வித் திட்டம் அமலில் உள்ளது. அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி, இந்தி மொழி மற்றும் ஆங்கில மொழி என மூன்று மொழிகளில் கற்றுவருகின்றனர். தமிழகத்தில் மட்டும், இந்தி மொழி வெறுப்புணர்வு உள்ளவர்களின் ஆதிக்கத்தால், இருமொழி கல்விக்கொள்கை நடைமுறையில் உள்ளது. இதனால், தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள ஏழை மாணவர்கள், விரும்பினாலும் இந்தி படிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. வசதி வாய்ப்புள்ளவர்களும், இந்தி மொழி வெறுப்புணர்வுப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தாரும், இந்தி மொழியைப் பயின்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேறியுள்ளனர். மேலும், முஸ்லிம்கள் உருது மொழிபடிக்க விரும்பினால், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துதரும் தமிழக அரசு, இந்தி மொழி கற்க தடை விதிக்கிறது. இதனால், மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, தமிழகத்தில் மும்மொழி கல்வித் திட்டத்தையும், மழலையர் துவக்கப் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். குறிப்பாக, உயர் கல்வியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைகொடுக்க வேண்டும்' என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.