`ரஜினியை ஏற்க மாட்டார்கள்; அடுத்த முதல்வர் டி.டி.விதான்' - குஷிப்படுத்திய தங்க தமிழ்ச்செல்வன்

ரஜினியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தின் முதலமைச்சராக டி.டி.வி. தினகரன் பொறுப்பேற்பது உறுதி' என தங்க தமிழ்ச்செல்வன் பேசி ஆதரவாளர்களைக் குஷிப்படுத்தினார்.

தஞ்சாவூரில், டி.டி.வி அணி சார்பில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராகவும் அதை முழுமையாகக் குறைக்க வலியுறுத்தியும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு பேசுகையில், `நடிகர்கள் ரஜினி, கமல் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறேன் என்கிறார்கள். ஆரம்பியுங்கள் தப்பு இல்லை. காவிரியில் தண்ணீர் இல்லாமல்  டெல்டாவில் பயிர்கள் எல்லாம் கருகுகின்றன. விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சமயத்தில், இதுகுறித்து கர்நாடக அரசிடம் காவிரியில் தண்ணீர் திறக்கச் சொல்லி ஒரு வார்த்தை சொல்லுங்கள். அல்லது ஒரு அறிக்கையாவது விடுங்கள் பார்க்கலாம். போக்குவரத்து ஊழியர்களைக் கைதுசெய்கிறார்கள்; வாய் திறக்கவில்லை.

கன்னியாகுமரியில் மீனவர்கள் செத்துப்போனார்கள்; வாய் திறக்கவில்லை. ஆனால், ரசிகர்களைச் சந்திக்கிறீர்கள். ஆன்மிக ஆட்சி அமைப்போம் என்கிறீர்கள். அரசு அமைப்பது என்பது அவ்வளவு ஈஸியா. மக்களைப் புரிஞ்சுக்காம நீங்கள் இப்படிச் செய்வதை மக்கள் ரசிக்கவில்லை. உங்களை ஏற்றுகொள்ளவும் மாட்டார்கள். இன்றைக்கு மத்திய அரசுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் ஒரு அரசைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சீக்கிரமே இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். அண்ணன் டி.டி.வி, தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி' என்று பேசிமுடித்தார். அப்போது, கூட்டத்தில்  இருந்த டி.டி.வி ஆதரவாளர்கள், பலமாக கைகளைத் தட்டி, வாழ்க... வாழ்க... எனக் கோஷமிட்டனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!