‘முதல்வராக நீடிப்பேன்; சசிகலா குடும்பத்தை நம்ப வேண்டாம்!’ - அமைச்சர்களை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி | Do not believe sasikalas family - Edappadi Palanisamy warns cabinet ministers

வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (01/02/2018)

கடைசி தொடர்பு:15:03 (01/02/2018)

‘முதல்வராக நீடிப்பேன்; சசிகலா குடும்பத்தை நம்ப வேண்டாம்!’ - அமைச்சர்களை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

‘ஆட்சியை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்; கட்சியை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; தினகரனை ஒதுக்கிவிடுகிறோம்' என சசிகலா குடும்பத்தினர், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் விடுக்கும் தூது முயற்சியால் அதிர்ந்து போய் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘அமைச்சரவைக்கு எந்த இடையூறும் இல்லை. சசிகலா குடும்பத்தின் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம்’ என அமைச்சர்களை எச்சரித்திருக்கிறார் முதல்வர். 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர் ஆளும்கட்சி பிரமுகர்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியால் சசிகலா மகிழ்ச்சியில் இருந்தாலும், அதை அவர் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஒரே காரணம், குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் முட்டல் மோதல்கள்தாம். இளவரசி குடும்பத்துக்கு எதிராக நடராசன், தினகரன், திவாகரன் என மூவர் அணி கொதித்துக்கொண்டிருப்பதைக் கவலையோடு கவனித்து வருகிறார் சசிகலா. ‘தினகரனோடு அனுசரித்து நடந்துகொள்’ என சசிகலா அறிவுறுத்தியதை விவேக் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார்கள் குடும்ப உறவுகள். ‘எதைச் செய்தாலும் உங்களைக் கேட்டுத்தான் செயல்படுகிறேன். அத்தானைப்(தினகரன்) போல தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுப்பதில்லை. இது தவறு என்றால், பொறுப்புகளிலிருந்து விலகிக்கொள்கிறேன்’ என உறுதியாகக் கூறிவிட்டு வந்துவிட்டார்.

தினகரன்இதையடுத்து, ‘ஜெயா டி.வியும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையும் விரைவில் நம்முடைய கட்டுப்பாட்டில் வரும்’ எனப் பேசிக்கொண்டிருக்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். அதேநேரம், தினகரன் கட்டுப்பாட்டுக்குள் அனைத்து அதிகாரங்களும் சென்றுவிடக் கூடாது என்பதில் திவாகரன் தரப்பினர் தெளிவாக உள்ளனர். சென்னை, உயர்நீதிமன்றத்தில் நடக்கும் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கையும் உதாரணமாகக் காட்டுகின்றனர். ‘இந்த வழக்கில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்துவிட மாட்டோம். இதுதொடர்பாக, கொங்கு மண்டலத்தில் உள்ள சில அமைச்சர்கள் எங்களை அணுகிப் பேசினர். இந்த விவகாரத்தில் எங்களுடைய நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கட்சியை எங்களிடம் ஒப்படைத்தால் ஆட்சிக்கு எந்தவிதச் சிக்கலும் வராது’ என மன்னார்குடி உறவுகள் கூறியதாகத் தகவல் வெளியானது. 

திவாகரன் தரப்பினரின் இந்த நடவடிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ரசிக்கவில்லை. இதுகுறித்து மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘அமைச்சரவைக்கு எந்தவித இடையூறும் இல்லை. சசிகலா குடும்பத்தின் பொய்ச் செய்திகளை ஒருபோதும் நம்ப வேண்டாம். திவாகரன் தரப்பினர் சொல்வது அனைத்தும் பொய். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு முடிவுக்கு வந்துவிட்டால், ஒன்றும் ஆகப் போவது இல்லை. சொல்லப் போனால் தீர்ப்பு நமக்குச் சாதகமாகத்தான் வரும். சசிகலா குடும்பத்தினரை அமைச்சர்கள் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் பரப்புகின்றனர். அப்படியொன்று நடக்கவே இல்லை. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தாலும், எதிர்முகாமிலிருந்து 20 எம்.எல்.ஏ-க்கள் நம்மை ஆதரிப்பார்கள். கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில எம்.எல்.ஏ-க்கள் நம்மிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் இப்போது தேர்தலை சந்திக்கத் தயாராக இல்லை. 

திவாகரன்சசிகலா குடும்பத்துக்குள்ளேயே சண்டை நீடித்துக்கொண்டிருக்கிறது. அதைப் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உள்ளாட்சித் தேர்தலில் நம்முடைய வியூகத்தைப் பார்த்து தினகரன் பயந்து போய் இருக்கிறார். அதனால்தான் புதிய கட்சியைத் தொடங்கவும் தயக்கம் காட்டிக்கொண்டிருக்கிறார். உள்ளாட்சியில் எந்த அடையாளமும் இல்லாமல் அவர் காணாமல் போய்விடுவார். இதுவரையில், ஒரு கட்சியாக அவர் தேர்தல் ஆணையத்தில் எதையும் பதிவு செய்யவில்லை. நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. ஒரு கட்சியாகவும் பதிவு செய்திருக்கிறது. இவர்கள் கேட்டால் தனிச் சின்னம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தினகரன் இனிமேல்தான் கட்சியைப் பதிவு செய்ய வேண்டும்.

தேசிய தேர்தல் ஆணையத்தின் வழியாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்காத ஒரு கட்சிக்கு தனிச்சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை. தொடக்கத்திலேயே கட்சி தொடங்கி ஆர்.கே.நகரில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டிருந்தால், அதே சின்னம் உள்ளாட்சித் தேர்தலிலும் தினகரனுக்குக் கிடைத்திருக்கும். 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நான் முதல்வராக நீடிப்பேன். இதில் எந்தச் சிக்கலும் வரப் போவதில்லை. அதிகாரத்தை இழந்துவிட்ட ஆத்திரத்தில் சசிகலா குடும்பம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். நம்மை ற்றுவதற்காக சண்டை நடப்பது போலக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்’ எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார். 

“உள்ளாட்சித் தேர்தலுக்காக தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருந்த தினகரன், குடும்பத்துக்குள் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அந்தக் கனவுகளை ஒதுக்கி வைத்துவிட்டார். அ.தி.மு.க அம்மா அணி என்ற பெயரிலேயே இயங்குவதை உறுதிப்படுத்த நீதிமன்றத்தின் மூலம் உத்தரவைப் பெறும் முடிவில் இருக்கிறார். அதேநேரம், அ.தி.மு.கவுக்குள் சசிகலா மீதான பிடிமானத்தை உறுதிப்படுத்தும் வேலையில் திவாகரன் தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியொரு நடவடிக்கையை தினகரன் விரும்பவில்லை. ‘எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வத்தின் துரோகத்தை வெளிப்படுத்தினால்தான் மக்கள் மத்தியில் நமக்கான செல்வாக்கு உயரும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார். இதன் விளைவாகத்தான் முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. 'ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நிறுவனங்களில் ஆதிக்கத்தைச் செலுத்திவிட்டால், அனைத்தும் தன்னை நோக்கி வந்துவிடும்' என நம்புகிறார் தினகரன். இப்படியொன்று நடந்துவிட்டால், தினகரனின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பதால்தான் குடும்ப உறவுகளிடம் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிக்கின்றனர் சில அமைச்சர்கள்" என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.


டிரெண்டிங் @ விகடன்