உயிருக்குப் போராடும் மாணவி... கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம்! என்னவாகும் தந்தையின் பாசப் போராட்டம்? | The heart wrenching story of a school going girl who is fighting for her life

வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (01/02/2018)

கடைசி தொடர்பு:11:45 (02/02/2018)

உயிருக்குப் போராடும் மாணவி... கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம்! என்னவாகும் தந்தையின் பாசப் போராட்டம்?

தற்கொலை செய்துக்கொள்ளும் பள்ளி  மாணவிகள்

2017 ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தையே அதிரவைக்கும் பல சம்பவங்கள் நடந்துமுடிந்தன. வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசுப் பள்ளியில், 11-ம் வகுப்பு படித்துவந்த தீபா, சங்கரி, மனீஷா, ரேவதி ஆகிய மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். அதேபோல சேலத்தில் ஜெயராணி, கவிஸ்ரீ தோழிகள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து குதித்தனர். இதில் ஜெயராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவிஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஆகஸ்டு மாதம் நெல்லையைச் சேர்ந்த 7 ஆவது படிக்கும் மாணவி அப்ரின் ஹாஜிரா வீட்டு மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இன்னும் பல மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர். இந்த மாணவிகளின் தற்கொலை முயற்சிகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுவது ஒன்றே ஒன்றுதான்... 'ஆசிரியர் திட்டியதால் அல்லது அடித்ததால் மனம் உடைந்து போய் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளனர்' என்பதுதான் அது. இன்னமும் வெளியுலகுக்கு வராத பல சம்பவங்கள் பள்ளிகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி வெளி உலகுக்கு வராமல், பள்ளி நிர்வாகத்தால் மூழ்கடிக்கப்பட்ட ஒரு கொடூரச் சம்பவம்தான் சென்னை, மதுரவாயலில் இயங்கிவரும் 'மாதா குரூப் ஆஃப் இன்ஸ்டிட்யூஷன்'-க்குச் சொந்தமான 'அவர் லேடி மெட்ரிகுலேஷன்' பள்ளியில் நடந்திருக்கிறது.

'அவர் லேடி பள்ளி'யில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி தாரிகா பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி விசாரணை என்ற பெயரில் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தாரிகா பானுவை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார்கள். இந்தக் கடுமையான விசாரணையைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவி தற்கொலை செய்துகொள்வதற்காக இரண்டாவது மாடியிலிருந்து குதித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த தாரிகா பானுவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாரிகாபானு கோமா நிலையை அடைந்துவிட்டார். மேலும் அவரின் முதுகெலும்பு உடைந்துவிட்டது. முதுகெலும்பு ஆபரேஷன் செய்யவேண்டுமானால், 'மாணவி கண் விழிக்க வேண்டும்' என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். போலீஸ் கேஸ் ஆனபோது பள்ளிநிர்வாகம், "தாரிகாபானு ஒரு பையன்மீது காதல்வயப்பட்டிருக்கிறார். அதைக் கண்டிப்பதற்காக ஆசிரியர்கள் விசாரணை வைத்தோம். மேலும் மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து வரச்சொல்லியிருந்தோம். அவர்கள் வருவதற்குள் இப்படி செய்துகொண்டாள்" என்று சொல்லி பிரச்னையை முடித்துவிட்டது. ஆனால், அதன்பிறகு கடந்த ஐந்து மாதங்களாக உயிருக்குப் போராடிவரும் தாரிகா பானுவுக்கு எவ்வித உதவியும் பள்ளி நிர்வாகம் செய்யவில்லை என தாரிகாபானுவின் தந்தை கூறுகிறார்.

அவர் லேடி மெட்ரிகுலேஷன் பள்ளி

அவர் லேடி மெட்ரிகுலேஷன் பள்ளி 

இதைப்பற்றி அவரிடம் பேசியபோது "ஜூலை 20 -ம் தேதி, மதியம் பள்ளியிலிருந்து என் மனைவிக்கு போன்கால் வந்தது. 'பள்ளி முதல்வர் பேசுகிறேன்... உங்கள் பிள்ளையின் காதல் விவகாரம் பற்றி உங்களிடம் பேச வேண்டும் உடனடியாகக் கிளம்பி வாங்க' என்று தகவல் வந்தது. சரி என்று நானும் எனது மனைவியும் ஆட்டோவில் சரியாக 3.30 மணிக்குப் பள்ளிக்குச் சென்றோம். அங்கு சென்று பார்க்கும்போது என் மகள் ரத்தவெள்ளத்தில் படுத்தப்படி துடித்துக்கொண்டிருந்தாள். 'அய்யய்யோ... எம் புள்ளைக்கு என்னாச்சின்னு... நானும் என் மனைவியும் தலையில் அடித்துக் கதறிக்கொண்டு பிள்ளையைத் தூக்கினோம். ஆஸ்பிட்டலுக்கு கால் பண்ணுங்களேன்னு சொன்னேன். பள்ளி நிர்வாகம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததே தவிர... வேறு எதுவும் செய்யவில்லை. உடனே அருகிலிருந்த ஆட்டோவைப் பிடித்து மகளை அழைத்துக்கொண்டு ரக்சீத் மருத்துவமனைக்கு ஓடினோம். அப்போது உதவிக்குக்கூட எந்த ஆசிரியரும் வரவில்லை. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே உதவி செய்தனர். 'உங்கள் மகள் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். மேலும் முதுகுத் தண்டு உடைந்துள்ளது. கால் எலும்பும் உடைந்துவிட்டது. தற்போது காலில் மட்டும் சிகிச்சை பார்த்துள்ளனர். ஆனால், கோமாவிலிருந்து எழுந்தால் மட்டுமே முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய முடியும்' என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.

தாரிகா பானுவின் தந்தை

தாரிகா பானுவின் தந்தை

பின்னர் அங்கிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். கோமாவிலிருந்து மீண்டால்தான் அறுவைச் சிகிச்சை செய்யமுடியும் என்று அங்கேயும் சொல்லிவிட்டார்கள். அதன்பின் பள்ளிக்கூடத்துக்குச் சென்று விசாரித்ததில், 'உங்கள் மகள் டியூசன் படிக்கும் இடத்தில் ஒரு பையனைக் காதலிக்கிறார். அதைப் பற்றி விசாரிப்பதற்காக அழைத்தோம். நீங்கள் வரும் செய்தியைக் கேட்டு மாடியிலிருந்து குதித்துவிட்டாள்' என்று சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னார்கள். ஒரு சின்ன புள்ள மேல இப்படி அபாண்டமா பழி சுமத்துறாங்க.   'விசாரணை செய்யத் தெரிந்த உங்களுக்கு, நாங்கள் வரும் வரை பாதுகாப்பு கொடுக்கத் தெரியாதா? எந்தப் பிரச்னையாக இருந்தாலும் முதலில் எங்களிடம் சொல்லவேண்டியதுதானே. என் பிள்ளையை இப்படி ஆக்கிவிட்டீர்களே...' என்று கத்தினேன். அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை. 
நான் ஓட்டுநர் வேலை பார்க்கிறேன். என் மகளுக்காக லட்சக்கணக்கில் கடன்வாங்கி சிகிச்சை செய்துவருகிறேன். விபத்து நடந்துமுடிந்த புதிதில் ஒருமுறை மட்டும் பள்ளியின் சார்பில், ஆசிரியைகள் வந்தார்கள். பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். ஆனால், அந்தப் பணம் என் மகளுடன் படிக்கும் மாணவியின் வீட்டிலிருந்து சிகிச்சைக்காகக் கொடுத்திருந்தார்கள். அந்த உண்மையைக்கூட இவர்கள் என்னிடம் சொல்லவில்லை. அதனால் அந்தப் பணத்தை அவர்களிடமிருந்து நான் வாங்கவில்லை. அதுமட்டுமல்லாமல், மகளின் தோழிகளின் வீட்டிலிருந்து சிகிச்சைக்குக் கொடுக்கச்சொல்லி பணம் அனுப்பியுள்ளார்கள். அந்தப் பணத்தையும் சிகிச்சைக்குத் தரவில்லை. ஆறுதலுக்குக்கூட உதவி செய்ய பள்ளியின் நிர்வாகம் மறுக்கிறது. கடந்த ஐந்து மாதங்களில், ஆசிரியர்களோ, பள்ளி நிர்வாகத்தினரோ யாரும் என் குழந்தையின் உடல்நலனைப் பற்றிக்கூட விசாரிக்க வரவில்லை. 

என் மகளைப் பிழைக்கவைக்க யார் யாரிடமோ கடன் கேட்கிறேன். ஐந்து மாதங்களுக்குப் பிறகு சில தினங்களுக்கு முன்தான் என் மகள் கோமாவிலிருந்து கண்விழித்தாள். ஆனாலும் இன்னும் பேசமுடியவில்லை. கை, கால்களை அசைக்கமுடியவில்லை. உடல்நிலை சற்று தேறியவுடன் அறுவைச் சிகிச்சை வைத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இன்னும் சில வாரங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரவிருக்கிறது. என் மகளோட படிப்பு போச்சு, உடம்பும் போச்சு... படிப்பு போனாலும் போகட்டும், என் பொண்ணு உடல்நிலை தேறிவந்தா போதும். மருத்துவமனையில அறுவைச் சிகிச்சை செய்றதுக்கு நிறைய பணம் தேவைப்படும்னு சொல்றாங்க. என் உயிரே போனாலும் என் மகளை காப்பாற்றி தீருவேன்." என்று தாரிகாபானுவின் தந்தை கலங்கினார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தாரிகா பானு

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தாரிகா பானு

இதைப்பற்றி பள்ளியின் முதல்வரிடம் பேசியபோது, "மாணவி தாரிகா பானு என் குழந்தை போன்றவள். அம்மா என்றுதான் என்னை அழைப்பாள். டியூஷன் படிக்கும்போது அங்கு ஒரு பையன் இவளைக் காதலிப்பதாகத் தெரியவந்தது. இதுபற்றி விசாரிக்க அவளை அழைத்தேன். அவர்களின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்து வரச்செய்தேன். இதைப்பற்றி இரண்டொரு நாள்களுக்கு முன் அவர்களது பெற்றோரிடம் தெரிவித்திருந்தேன். அதனால் அவர்கள் தாரிகாவை அடித்துள்ளார்கள். அதனால்தான் அவர்கள் வருவதற்குள் பயத்தில் அப்படி செய்துகொண்டாள். நாங்கள் உதவி செய்ய முன்வருவதாகச் சொன்னோம். அவளின் தந்தை எங்கள் உதவியை ஏற்றுக்கொள்ளவில்லை" என்றார். 'இப்போது தாரிகாபானு எப்படி இருக்கிறார்... எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியுமா?' என்ற  கேள்வியை அவரிடமே கேட்டோம். ''ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாள்... பின்பு அவளுடைய வீட்டில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்'' என்கிறார் பள்ளியின் முதல்வர். 'இப்போதும் அதே போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில்தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார் தாரிகா பானு. இன்னும் வீடு திரும்பவில்லை. அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமாம். அந்தப் பணத் தேவைக்காக அவர் தந்தை அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்' என்று நாம் சொன்னோம். ''மாணவி விரைவில் பூரண குணமடைய வேண்டும் அதற்காக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்" என்று மட்டும் கூறினார் பள்ளியின் முதல்வர்.

இதுபோன்ற தற்கொலை முயற்சி தற்போது தமிழகத்தில் தொடர்ந்து அதிரித்துவருகிறது. ஆண்டுக்கொருமுறை குழந்தைகளுக்கு உளவியல் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று பலர் சொல்லிவருகிறார்கள். உண்மையில், ஆண்டுக்கொருமுறை உளவியல் பயிற்சி தர வேண்டியது குழந்தைகளுக்கு மட்டுமல்ல... ஆசிரியர்களுக்கும் தான்.  இது ஒருபக்கம் இருந்தாலும் தற்போதைய பிரச்னை அந்த மாணவியைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். கல்வி நிறுவனமும் அதற்காக ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. மாணவியின் தந்தை தன் சக்திக்கு மீறி பல லட்சங்களை மருத்துவத்துக்காகச் செலவழித்த நிலையில், இன்னமும் பணத்துக்காக நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார். அந்தத் தந்தையின் வேதனைக்குத் தீர்வு, அவர் மகள் குணமடைவதில்தான் இருக்கிறது. அவர் மகள் குணமாவதற்கு பணம் மட்டுமே தடையாக இருக்கிறது... தடை தகருமா? தந்தையின் வேதனை தீருமா?


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close