வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (01/02/2018)

கடைசி தொடர்பு:16:49 (01/02/2018)

`நாலு வருஷமா புகாரைப் போலீஸ் கண்டுக்கல' - வேதனையில் கலெக்டர் ஆபீஸில் உயிரை மாய்க்க முயன்ற ஊழியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர் ஒருவர் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வருபவர் காஜா ஹூசைன். மாநகராட்சி ஊழியராகப் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இவரது வீட்டின் முன்பு சிலர் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், இழுத்தடித்து வந்ததாக ஹுசைன் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து, மனமுடைந்த காஜா ஹுசைன், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட அங்கு பணியில் இருந்த காவலர்கள், அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனைப் பிடிங்கி அவர்மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கும், மறுவரை ஆணைய மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், அதையும் மீறி நடந்த இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, காஜா ஹுசைனின் நண்பர்கள் கூறுகையில், "அவரு மாநகராட்சில, ஓட்டுநரா வேலை செஞ்சு, ஓய்வு பெற்றவரு. அவரு வீட்டுக்கு முன்பு, நிழலுக்காக சிலர் ஆட்டோக்களை நிறுத்த ஆரம்பித்தனர். 4 வருஷம் ஆச்சு. இப்பவரை, அவர் வீட்டு முன்னாடிதான் ஆட்டோ நிறுத்தராங்க. ஆனா, இதுக்காக எந்த அனுமதியும் வாங்கல. இது சம்பந்தமா, போலீஸ்ல புகார் கொடுத்தாலும் கண்டுக்க மாட்ராங்க. போலீஸும் அவங்களுக்கு, சப்போர்ட்டா இருக்காங்க. இதனால, காஜானால வியாபாரம் செய்ய முடியல" என்றனர்.