வாடகை வீட்டில் கைவரிசை காட்டிய ஆந்திரப் பெண்கள்... சிக்கவைத்த வங்கிக் கணக்கு எண்! | Andhra women gets arrested due to fake bank account

வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (01/02/2018)

கடைசி தொடர்பு:19:16 (02/02/2018)

வாடகை வீட்டில் கைவரிசை காட்டிய ஆந்திரப் பெண்கள்... சிக்கவைத்த வங்கிக் கணக்கு எண்!

போலீஸ்

ஆந்திர மாநிலப் பெண்கள் சிலர், தாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரது வீட்டிலேயே கன்னமிட்டுச் சென்ற விவகாரம் ராமநாதபுரம் மாவட்டத்தை பரபரப்புக்குள்ளாக்கியது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளைத் துப்பறிந்து சென்ற தமிழகக் காவல்துறை, திருடப்பட்ட  2.5 லட்சம் ரூபாய் மற்றும் 5.5 பவுன் நகைகளையும் மீட்டிருப்பது பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றிருக்கிறது.

ரவணா

ராமநாதபுரம் எம்.எஸ்.கே-நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது வீட்டில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சு, சுமதி என்ற இரு பெண்கள் வாடகைக்கு வசித்துவந்துள்ளனர். கட்டில் வயர் திரிப்பது மற்றும் பாய் விற்பனை தொழில் விஷயமாக காலையில் வேலைக்குச் செல்வதும், மாலையில் வீடு திரும்புவதுமாக இருந்த இவர்களுடன் பாக்கியம் அன்னியோன்னியமாகப் பழகியுள்ளார். நாள்கள் செல்லச் செல்ல இவர்களிடையே நட்பு பலப்பட வாடகைக்குக் குடியிருந்த இருவரையும் தமது உறவினர்கள்போல் எண்ணிய பாக்கியம், அவர்கள் இருவரையும் தனது வீட்டுக்குள்ளேயே அழைத்து உட்கார வைத்துப் பேசுவது, அவர்களுக்கு உணவு அளிப்பது என அதீதப் பாசம் காட்டியுள்ளார்.

 

இந்த நிலையில், பாக்கியத்தின் உறவினரான பாண்டி என்பவர், தான் கார் விற்ற பணம் ரூபாய் 2.5 லட்சத்தை கடந்த 3.6.17 அன்று பாக்கியத்திடம் கொடுத்துள்ளார். அதனைப் பீரோவில் வைக்கச்சென்ற பாக்கியம் பீரோவை சரிவரப் பூட்டவில்லை. பாக்கியத்தின் செய்கைகளைப் பஞ்சுவும், சுமதியும் கவனித்துக்கொண்டிருந்துள்ளனர். அந்நேரத்தில் குடிதண்ணீர் லாரி வர... பாக்கியம் தான் தண்ணீர் எடுத்து வரும் வரை வீட்டினைப் பார்த்துக்கொள்ளுமாறு பஞ்சு மற்றும் சுமதியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். தண்ணீர் எடுத்துவிட்டு வீடு திரும்பிய பாக்கியம், பணம் வைத்திருந்த பீரோ திறந்து கிடப்பதையும் அதிலிருந்த 5.5 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணம் இரண்டரை லட்சம் ரூபாய் திருடு போயிருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார். மேலும், பஞ்சு, சுமதி இருவரும் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து மாயமாகியிருப்பதையும் அறிந்த பாக்கியம், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராமநாதபுரம் பி-1 காவல் நிலைய போலீஸார், பணம் திருட்டுப் போனது குறித்தும் வாடகை வீட்டில் குடியிருந்த ஆந்திரப் பெண்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். இதில், பஞ்சு - சுமதி இருவரும் சாதுர்யமாக எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாததுடன், திருட்டில் ஈடுபடும் நோக்கத்துடனேயே அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வீடு முழுவதும் சோதனையிட்டதில் 10 இலக்க எண் கொண்ட ஒரு துண்டுச் சீட்டு மட்டுமே கிடைத்தது.

இந்தத் துண்டுச் சீட்டினை வைத்து விசாரணையில் இறங்கிய பி-1 போலீஸார் இறுதியாக அது ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வங்கிக் கணக்கு எண் எனக் கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பி-1 காவல் சார்பு ஆய்வாளர் ஜோதி முருகன், காவலர்கள் கருப்பசாமி, பாலமுருகன், மோகன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஹரி ஆகியோரைக் கொண்ட டீம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவுப்படி அந்த வங்கி எண்ணில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியான ஆந்திர மாநிலம் குடுபிடி மாவட்டம் சேத்தன்னப்பள்ளி பகுதிக்கு விரைந்தனர்.

அங்கு சேத்தன்னப்பள்ளி போலீஸாரிடம் நடந்த திருட்டுச் சம்பவம் பற்றிக் கூறி அவர்களின் உதவியைக் கோரியுள்ளனர். இதையடுத்து சேத்தன்னப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் அப்துல் பாஸ்கா மற்றும் போலீஸார் உதவியோடு அப்பகுதியில் இருந்த பஞ்சு, சுமதி ஆகிய இருவரையும் கண்டறிந்தனர். அவர்களை விசாரணை எனக் கூறி சேத்தன்னப்பள்ளி காவல்நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு அந்த இரு பெண்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணின் பெயர் சுமதி அல்ல என்பதும் அவரது உண்மை பெயர் ரவணா என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 5.5 பவுன் நகையைக் கைப்பற்றியதோடு, 'இன்னும் இரு தினங்களுக்குள் இரண்டரை லட்ச ரூபாய் பணத்தைப் பாக்கியத்தின் வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும்' என ரவணாவின் உறவினர்களிடம் எச்சரித்ததுடன் ரவணாவையும் கைது செய்து ராமநாதபுரம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். திருட்டுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு பெண்ணான பஞ்சு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாக்கியத்தின் வங்கிக் கணக்கிற்கு 2.5 லட்ச ரூபாய் பணம் ஏ.டி.எம் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.

திருட்டில் ஈடுபட்ட பெண்களைப் பற்றி முழுமையாக ஏதும் தெரியாத நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கிடைத்த 10 இலக்க எண்களின் மூலம் விசாரணை நடத்தி, கொள்ளை போன பணம் மற்றும் நகையினை மீட்டதுடன் போலியான பெயரில் வாடகைக்குத் தங்கியிருந்து திருட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநிலப் பெண்ணையும் கைது செய்த ராமநாதபுரம் பி-1 போலீஸாரின் திறமையை மாவட்ட மக்கள் பாராட்டுகிறார்கள்.

 


டிரெண்டிங் @ விகடன்