`இந்தப் பட்ஜெட்டை ஏற்றுக்கொள்ளவே முடியாது' - புதுச்சேரி முதல்வர் காட்டம்

``இன்றைய பட்ஜெட்டில் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, டெல்லி ஆகியவை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது” என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

நாராயணசாமி

2018-19 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலை தாக்கல் செய்தார். அது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “மத்திய அரசின் இன்றைய பட்ஜெட்டில் மருத்துவம், கல்வி, சாலை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. குறிப்பாக, இந்தப் பட்ஜெட்டைப் பொறுத்தவரை விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதேபோல நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் தளவாடங்கள் அமைப்பதற்கும் எந்தவிதத் திட்டங்களும் பட்ஜெட் உரையில் இல்லை. ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாத பட்ஜெட்டாகவே இருக்கிறது. மேலும், கறுப்புப் பணம் ஒழிப்பு பற்றி இதுவரை மத்திய அரசிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை. யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, டெல்லி ஆகியவை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்பதால் அரசு சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!