நரசிங்கபெருமாள் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த ரஜினி மகள்! | aishwarya rajinikanth offer prayers at Keezhapavur Narasinga perumal temple

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (01/02/2018)

கடைசி தொடர்பு:20:30 (01/02/2018)

நரசிங்கபெருமாள் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த ரஜினி மகள்!

அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட வாரியாக கட்சியின் நிர்வாகிகளை அறிவிக்க நடவடிக்கை எடுத்துவரக்கூடிய நிலையில், நெல்லையில் உள்ள நரசிங்கபெருமாள் கோயிலில் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

ஐஸ்வர்யா பிரார்த்தனை

ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் எனப் பெயர்மாற்றம் செய்த நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பணிகளில் வேகம் காட்டத் தொடங்கி இருக்கிறார். கட்சியின் சார்பாக மாவட்டக் கூட்டங்களை சுதாகர் தலைமையில் நடத்தி வருவதுடன், மாவட்ட நிர்வாகிகளையும் அறிவித்து வருகிறார். வேலூர், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பிற மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் தேர்வு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நெல்லை மாவட்டம், கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீநரசிங்க பெருமாள் கோயிலுக்கு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் சில தினங்களுக்கு முன்பு நேரில் வந்து சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார். அரசியல்வாதிகள் அதிகமாக வரக்கூடிய கோயில்களில் ஒன்றான இந்தக் கோயிலில் வழிபட்டார். இந்தக் கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்றால், நியாயமான வழக்கு விவகாரங்களில் இருந்து விடுபட முடியும். அச்சுறுத்தும் வழக்குகளிலும்கூட சுமுகத் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் இருக்கிறது. 

அத்துடன், அரசியல்வாதிகளும் இந்தக் கோயிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம், கேரளா, புதுவை மாநிலங்களின் அரசியல்வாதிகள் சிலர் அடிக்கடி இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்க நரசிங்கபெருமாள் உதவுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதனால் இது தொடர்பான கோரிக்கைக்காகவே பெருமாபாலவர்கள் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். 

நரசிங்கபெருமாள் கோயில்

இந்த நிலையில், நரசிங்கபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷ் மற்றும் தந்தை ரஜினிகாந்த் பெயர்களில் அர்ச்சனை செய்தார். பின்னர், கோயில் வளாகத்திலேயே சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து தியானம் செய்த அவர், அங்கிருந்து சென்றுள்ளார். ரஜினிகாந்த் அரசியல் இயக்கம் தொடங்கி இருக்கும் நிலையில், இந்தக் கோயில் பற்றி நண்பர்கள் மூலம் தெரியவந்ததைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தி முடித்து விட்டு சென்னைக்கு திரும்பியதாகத் தெரிகிறது.