வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (01/02/2018)

கடைசி தொடர்பு:12:20 (02/02/2018)

சொத்துத்தகராறு! - மருத்துவமனைக்கு வந்து தீ வைத்துக்கொண்ட இளைஞர்

FIRE

சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த இளைஞர் ஒருவர் மறைவான ஓர் இடத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மருத்துவமனை டீன் அலுவலகத்தின் எதிரே வந்து உடலில் தீ வைத்துக்கொண்ட சம்பவம் பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைத்தது. மருத்துவமனை ஊழியர்கள் ஓடி வந்து தீயை அணைத்து அந்த இளைஞரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அங்கிருந்தவர்கள் அவரிடம் விசாரித்தபோது, ``என் பேரு மோகன். குடும்பத்தில் ஏற்பட்ட சொத்துப் பிரச்னையின் காரணமாக தீ வைத்துக்கொண்டேன். மருத்துவமனையில் தீ வைத்துக்கொண்டால் உடனே மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றி விடுவார்கள் என்பதால் இங்கு வந்து தீக்குளித்தேன்'' என்றார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடலில் 99 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மிக மோசமான நிலையில் இருந்துவருகிறார்.

தீ வைத்துக்கொண்ட மோகன் சேலம் பழைய சூரமங்கலம் ரயில்வே நகரைச் சேர்ந்தவர். இவரது தந்தை குணசேகரன். அம்மா பூங்கோதை. மஞ்சு என்ற அக்காவும்,  ரமேஷ், சங்கர் என்ற இரண்டு அண்ணன்களும் இவருக்கு இருக்கிறார்கள். மோகன் எம்.பி.ஏ., முடித்துவிட்டு சென்னையில் இந்துஸ்தான் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். இவர்களுக்குள் சொத்து பாகப் பிரிவினையின் காரணமாக ஏற்பட்ட தகராறில் தீ வைத்துக்கொண்டுள்ளார்.