``இங்க திருடர்கள் ஜாஸ்தி" - போலீஸ் போல நடித்து கொள்ளையடித்த வட இந்தியர்கள் கைது!

போலீஸார் போல நடித்து, நகைகளைக் கொள்ளையடித்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஏழு பேரை, கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் நேற்று மதியம் பெரிய கடைவீதி செல்வதற்காக, சலீவன் வீதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கத்தியைக் காட்டி ரமேஷை மிரட்டியுள்ளனர். இதனிடையே, அப்போது அங்கு காரில் வந்த வேறு சிலர், ரமேஷ்குமாரை மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த 2 1/2 பவுன் செயினைப் பறித்துக்கொண்டு சென்றுள்ளனர். அவர்களுடன், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த வழிப்பறிச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வெரைட்டி ஹால் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று காலை உக்கடம் பேரூர் பைபாஸ் சாலையில், போலீஸார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கே இன்னோவா கார் மற்றும் பல்சர், அவன்ஜெர் பைக்கில் வந்தவர்களிடம் சோதனை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள், கொள்ளையர்கள் எனத் தெரியவந்தது.  யாசர் அலி, தகி அலி, பைரோஸ் அலி, ஷாகித் அலி, சபீர் அலி, அஸ்லாம் பிஜாத் ஜாபரி, ராகேஷ் ரவீந்தர் ஷர்மா ஆகிய ஏழு பேரை போலீஸார் கைதுசெய்தனர். இவர்கள் அனைவரும், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களிடம் இருந்து, சுமார் 9 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள 41 சவரன் நகை மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் கோவையில் 8 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதும், இதுசம்பந்தமாக 4 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. விசாரணையில், அந்தக் கொள்ளையர்கள் போலீஸார் போல நடித்து நகைகளைக் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. மேலும், கோவை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் போலீஸார் போல நடித்து, வயதான பெண்களிடம், ``இங்க திருடர்கள் ஜாஸ்தி. இவ்வளவு நகை போட்டு போகக் கூடாது” என்று கூறி நகைகளைக் கழட்டி, பேப்பரில் வைத்து, அதற்குப் பதிலாக, கற்கள் மற்றும் பாட்டில் மூடிகளை பேப்பரில் வைத்துக்கொடுத்து கொள்ளையடித்த சம்பவமும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!