வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (02/02/2018)

கடைசி தொடர்பு:10:30 (02/02/2018)

குமரி மாவட்டத்தில் 2,283 பேருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு!

குமரி மாவட்டத்தில் 2,283 பேர் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார்

ஹெச்.ஐ.வி விழிப்பு உணர்வு

சர்வதேச எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன், கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது எய்ட்ஸ் தின விழிப்பு உணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. 

பின்னர், எயிட்ஸ் விழிப்பு உணர்வுப் பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. அதை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். செட்டிகுளம் வழியாகச் சென்ற விழிப்பு உணர்வுப் பேரணி, எஸ்.எல்.பி மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிறப்பான வகையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், ’’குமரி மாவட்டத்தில் ஹெச்.ஐ.வி பாதிப்பைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஹெச்.ஐ.வி பாதிப்பில் இருந்து விடுபடுவது தொடர்பான விழிப்பு உணர்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இதுவரை குமரி மாவட்டத்தில், 1,255 ஆண்கள், 951 பெண்கள், 70 குழந்தைகள், 7 திருநங்கைகள் என மொத்தம் 2,283 பேர் ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளாகி இருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

உறுதியேற்பு

ரத்தப் பரிசோதனையின் மூலமாக ஹெச்.ஐ.வி பாதிப்பைக் கண்டறிய முடியும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருந்தாலும், உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் அவர்களின் குழந்தைகளுக்கு அந்த பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க மருத்துவத்தில் வழி இருக்கிறது. அதனால் ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானவர்கள், உரிய சிகிச்சை முறைகளைக் கடைப்பிடித்து எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முன்வர வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.