வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (02/02/2018)

கடைசி தொடர்பு:10:34 (02/02/2018)

அரசியலில் ரஜினி, கமல்... யாருக்கு என் ஆதரவு?- மதுராந்தகத்தில் மனம் திறந்த விஷால்!

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 123-வது பிறந்தநாள் விழா திண்டிவனத்தில் நடந்தது. இந்த விழாவுக்குச் சென்றுவிட்டு, சென்னை திரும்பும் வழியில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஒருவரின் இல்ல காதணி விழாவில் நடிகர் விஷால் கலந்துகொண்டார்.

விஷால்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், ``ஓமந்தூர் ராமசாமி அவர்களின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் என்பது சமூக சேவை செய்யக்கூடிய தளம். நடிகர்கள் மட்டுமல்ல சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டிய நோக்கத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ரஜினி, கமல் ஆகியோர் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே பலர் அரசியலில் இருக்கிறார்கள். எல்லோரும் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம். நடிகர்கள் அரசியலில் நுழையும்போது பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதையெல்லாம் எதிர்கொண்டால்தான் மக்களுக்குச் சிறப்பாக சேவை செய்யமுடியும். சமூக சேவைதான் அரசியல் என்பதால், நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன். எந்தத் துறையாக இருந்தாலும் கடினமாக உழைத்தால்தான் வெற்றிபெறமுடியும். தங்களின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமானால் கண்டிப்பாக மக்களை சந்தித்தாக வேண்டும். இதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.

ரஜினி, கமல் இவர்களில் யாருக்கு ஆதரவளிப்பீர்கள் என்ற கேள்விக்கு, “மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் ஆதரவளிப்பேன்" என்றார் விஷால்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க