வெளியிடப்பட்ட நேரம்: 02:02 (02/02/2018)

கடைசி தொடர்பு:18:02 (16/08/2018)

வயலுக்குச் சென்ற மூதாட்டி வெட்டிக் கொலை..!  - புதுக்கோட்டையில் சோகம்

துடைப்பத்துக்குப் பயன்படுத்தப்படும் விளக்குமாறு தோகையை அறுக்க வந்த மூதாட்டி கழுத்து அறுபட்டு வயல் மேட்டில் கிடந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ளது தொட்டியம்பட்டி கிராமம். இந்த ஊரில் உள்ள தாழ்பாய் கண்மாய் அருகிலுள்ள வயல்பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கிடந்தது. அந்த வழியாக வந்தவர்கள், அந்தச் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொன்னமராவதி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், விசாரணை செய்தனர். அவர்களது விசாரணையில், அந்த மூதாட்டி கட்டையாண்டிப்பட்டியைச் சேர்ந்த வெள்ளச்சி (70). கணவரின் பெயர் அடைக்கண் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.


வெள்ளச்சி வயல்வெளி மேடுகளில் விளைந்துக்கிடக்கும் விளக்குமாறு தோகையை அறுத்து சேகரித்து, அதைத் துடைப்பமாக செய்து வாரச்சந்தைகளில் விற்றுவருபவராம். மூன்று நாள்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒருமுறையோ தாழ்பாய் கண்மாய் மேடுகளில் தோகை அறுத்துச் செல்ல கையில் கதிர் அரிவாளுடன் வருவாராம். 

அந்த வழக்கத்தின்படியே இன்று காலை உணவு முடித்துவிட்டு வயல் பகுதியில் உள்ள விளக்குமாறு தோகை பறிக்க வந்திருக்கிறார். அவர் கொண்டுவந்திருந்த கதிர் அறுக்கும் அரிவாளால் வெள்ளச்சியின் கழுத்தை மர்ம நபர்கள் அறுத்துக் கொன்றிருக்கிறார்கள். அவரது கணவர் அடைக்கண், "அவ கழுத்துல குண்டுமணி நகைக் கூடக் கிடையாது. கையில் பணமும் இருக்காது. அவளைக் கொல்லும் அளவுக்கு காரணமும் ஒன்னும் இல்லை. நாங்க சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க.

அதுக்காக பெருசா நிலம் புலம் இருக்கும். அதுக்காக எம் பொண்டாட்டியைத் தெரிஞ்சவங்களே கொன்று இருப்பாங்கன்னு நினைச்சுட வேண்டாம். அப்படி இருந்தா, அவ ஏன் காடு கரடு ஏறி விளக்குமாறு தோகை அறுக்கப்போறா' என்று போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்தக் கொலை குறித்து போலீஸார் பல்வேறு கோணத்தில் விசாரித்துவருகின்றனர். மேலும், வெள்ளச்சியின் உடலை  புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.