வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (02/02/2018)

கடைசி தொடர்பு:10:52 (02/02/2018)

பிரசவ தேதியை மாற்றிக் கூறிய செவிலியர்..! அவதிப்பட்ட கர்ப்பிணிப் பெண்

கர்ப்பிணிப் பெண் ஒருவரது பிரசவ தேதியை அரசு துணை சுகாதார நிலையத்தில் பணியாற்றும் தலைமை நர்ஸ் இரண்டு மாதங்களுக்கு முன்பே தவறாக கொடுத்து அலைக்கழித்துவிட்டார். இதைத் தட்டிக் கேட்ட அந்தக் கர்ப்பிணிப் பெண்ணிடம், "அரசு ஊழியர்கள் எல்லாரும் சரியா வேலை செய்றாங்களா, நான் சரியா வேலை செய்ய. அவங்க சரியா வேலை செய்றப்போ. நானும் சரியா வேலை செய்றேன்" என்று சொல்ல அந்த கர்ப்பிணிப் பெண் கலங்கிப் போயிருக்கிறார். 

 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் உள்ள கள்ளப்பள்ளியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பிரியா கர்ப்பமாக இருக்கிறார். கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் வரும் லாலாப்பேட்டை துணை சுகாதார நிலையத்தில் பரிசோதனைகளைச் செய்துவந்திருக்கிறார். அங்கே உள்ள தலைமை நர்ஸ் பழனியம்மாள்தான் பிரியாவை மாதாமாதம் பரிசோதனை செய்துவந்திருக்கிறார். இந்நிலையில், பிரசவ தேதியாக பிரியாவுக்குத் தந்த அட்டையில் 02.01.2018 என்று கொடுத்திருக்கிறார். இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பு போய், 'இரண்டாம் தேதி பிரசவத்துக்காக சேர்ந்துகொள்ளலாமா?' என்று மருத்துவர்களிடம் ப்ரியா கேட்டிருக்கிறார். அங்கிருந்த டாக்டர்கள் பிரியாவை செக் செய்து பார்த்துவிட்டு, 'உனக்கு இன்னும் ரெண்டு மாசம் கழிச்சுதாம்மா பிரசவம் நடக்கும். யார் உனக்கு முன்கூட்டியே தேதி கொடுத்தது?' என்று கேட்டிருக்கிறார். உடனே, பழனியம்மாளுக்கு அங்கிருந்து போன் போட்டிருக்கிறார். அவர் எடுக்கவில்லை. 

இதனால், பழனியம்மாள் பற்றி 104 ஹெல்ப் லைனில் புகார் தெரிவித்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பழனியம்மாள், 'எல்லா அரசு ஊழியர்களும் சரியா வேலை செய்யும்போது நானும் சரியா செய்கிறேன்' என்று எகத்தாளமா பேசி இருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய பிரியாவின் உறவினர் முரளி, 'பிரியாவுக்குப் பிரசவ தேதியாக ரெண்டு மாசம் முன்னாடியே கொடுத்ததால், பிரச்னை இல்லாமல் போயிட்டு. இதையே உண்மையில் பிரசவம் ஆகக்கூடிய தேதியை விட்டு பிந்தைய தேதி கொடுத்திருந்தால், பிரியா நிலைமை என்னவாகி இருக்கும்? ஏற்கெனவே, இந்தப் பழனியம்மாள் பற்றி ஏகப்பட்ட புகார் இருக்கு. எங்ககிட்டயே, 'நீ யார்கிட்ட வேணும்ன்னா புகார் பண்ணு' என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.