நெல்லை வனப்பகுதியில் புலிகளின் கால் தடங்கள் பதிவு! | Tigers census is going on in western ghats

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (02/02/2018)

கடைசி தொடர்பு:11:10 (02/02/2018)

நெல்லை வனப்பகுதியில் புலிகளின் கால் தடங்கள் பதிவு!

கால் தடங்கள் பதிவு

நெல்லை மாவட்ட வனப்பகுதிகளில் நடக்கும் கணக்கெடுப்பில், புலிகள் மற்றும் யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் கால் தடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. 

நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தேசிய புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தேசியப் புலிகள் காப்பக ஆணையம் சார்பாக ஒரு வாரம் நடைபெற உள்ள இந்தப் பணியின் 5-ம் நாளான இன்று வழக்கம்போல தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள், வனத்துறையினர் 500 பேரும் 50 குழுக்களாகப் பணியில் ஈடுபட்டனர். இதற்காக பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருக்கும் ஜி.பி.எஸ் பொறுத்தப்பட்ட செல்போன் அப்ளிகேஷன் மூலமாக கணக்கெடுப்புகள்குறித்து உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டன. 

அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகப் பகுதிகளில் பரவலாக புலி, சிறுத்தை, கரடி, மான், மிளா, யானை உள்ளிட்ட மிருகங்களின் கால் தடங்களும், எச்சங்களும் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு பரவலாக மழை பெய்து வனப்பகுதி செழிப்பாக இருப்பதால், வனவிலங்குகளின் நடமாட்டம் பரவலாகக் காணப்படுகிறது. அத்துடன், ஈரப்பதம் இருப்பதால் கால் தடங்களைச் சுலபமாகப் பதிவு செய்ய முடிவதாக கணக்கெடுப்பில் பங்கேற்றிருப்பவர்கள் தெரிவித்தனர். 

புலிகள் கணக்கெடுப்பு

புலிகள் மட்டும் அல்லாமல் யானைகள், மான்கள், மிளா உள்ளிட்ட விலங்குகள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சி உள்ளிட்டவைக் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டுவருகின்றன. தொடர்ந்து இன்னும் இரு தினங்களுக்கு இந்தப் பணிகள் நடைபெற உள்ளன. கணக்கெடுப்புப் பணிகள் முடிவடையும் வரையும் வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போன்று யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. பிப்ரவரி 3-ம் தேதி வரையிலும் கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.