பணி நிரந்தரம் செய்யக்கோரி பள்ளித் துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்!

பள்ளித் துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்

மிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் நேற்று (1-2-2018) பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு வேண்டி சென்னை தேனாம்பேட்டையில் போராட்டம் நடத்தினர். 

தமிழகப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்களாகப் பலர் வேலை செய்துவருகின்றனர். இந்த நிலையில், மேலும் கூடுதலாகக் கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மாவட்டந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள், இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. அத்துடன் அவர்கள் குறைந்த ஊதியமே பெறுவதாகத் தெரிகிறது. இதையடுத்து, மாவட்டந்தோறும் உள்ள இந்த ஊழியர்கள் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், சம்பளத்தை உயர்த்தி வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், நேற்று காலை சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைதுசெய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர். பின்னர், மாலை விடுவிக்கப்பட்ட அவர்கள், மீண்டும் இரவு போராட்டத்தை நடத்தினர். இதனால் மறுபடியும் போலீஸார் அவர்களைக் கைதுசெய்து பேருந்தில் ஏற்றிச் சென்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், “நாங்கள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் துப்புரவு வேலை செய்துவருகிறோம். ஆறு ஆண்டுகளாகியும் எங்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை. எங்களுக்கு அடிப்படை ஊதியமே வெறும் 3 ஆயிரம் ரூபாய் மட்டும்தான். இதைவைத்து எங்கள் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது? அதேநேரத்தில், எங்களுக்குப் பின் சேர்ந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ததோடு அவர்களுக்கு ஊதியமும் அதிகம் இருக்கிறது. ஆனால், எங்களுக்கு எதையும் செய்யவில்லை. இதனால்தான் நேற்று போராட்டம் நடத்த முடிவுசெய்தோம். இந்தப் போராட்டத்தின்போது கல்வியமைச்சரைச் சந்தித்து அவரிடம் எங்கள் கோரிக்கைகளை வைக்க இருந்தோம். ஆனால், அவர் இங்கு இல்லை என்று அமைச்சகத் தரப்பில் சொல்லிவிட்டார்கள்” என்றனர் வருத்தத்துடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!