வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (02/02/2018)

கடைசி தொடர்பு:11:19 (02/02/2018)

அதிகாரிகள் நிதிகளைக் கவனமாக செலவிட வேண்டும்..! கிரண்பேடி அறிவுரை

அதிகாரிகள் அரசின் நிதிகளை செலவிடும்போது அதை தங்கள் பணமாக நினைத்துச் செலவு செய்யவேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு நிர்வாகச் சீர்திருத்தத்துறை சார்பில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நிர்வாகத்தில் பின்பற்ற வேண்டிய விதிகள், சட்டங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் கம்பன் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, “புதுச்சேரி ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சிறந்த மாநிலம். சுற்றுலாத் தலமான புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சுற்றுச் சூழல் பாதிப்பில்லாத பகுதியாக இருக்கிறது. அதிகாரம் என்பது பணி மற்றும் சேவை செய்வதுதானே தவிர யாரையும்  தண்டிப்பதோ, கைதுசெய்வதோ அல்லது பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதோ இல்லை. 

உயர் அதிகாரி முதல் கடைநிலை அதிகாரிகள் வரை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாதந்தோறும் அதிகாரிகள் ஒருங்கிணைந்த  நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். குளம், ஏரிகள்  உள்ளிட்ட நீர்  நிலைகளுக்கு அதிகாரிகள் பேருந்தில் சென்று ஆய்வுசெய்ய வேண்டும்.  உலகிலேயே வாழச் சிறந்த இடமாக புதுச்சேரி உள்ளது. என்னிடம் கோப்பு வரும்போது அதற்கான நிதி ஆதாரம் உள்ளதா? என்பதை அறிந்த  பின்னரே ஒப்புதல் அளிப்பேன். எனவே, அதிகாரிகள் அரசின் நிதிகளைச் செலவிடும்போது அதை உங்கள்  பணமாக  நினைத்துச் செலவு செய்யவேண்டும். பணம் கேட்டு ஏதேனும் கோப்பு வந்தால் ஏன், எதற்கு என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும்.

அரசியல்வாதிகளோ ஆட்சியாளர்களோ யார் வற்புறுத்தினாலும் கேள்வி கேட்பது எனது கடமை என்று பதில் கூறவேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு  நான் சென்னை வந்தபோது என் அருகில் இருந்த அதிகாரி ஒருவர் புதுச்சேரி சிறந்த மாநிலம்.  அதனைச் சென்று  பாருங்கள் என்று தெரிவித்தார். அதன்படி நானும் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ராஜ்நிவாஸ் உள்ளிட்ட  இடங்களைப்  பார்வையிட்டேன். அப்போது பிரெஞ்சு தூதரகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் தற்போதைய முதல் அமைச்சர் நாராயணசாமியும் நானும் அருகருகே அமர்ந்திருந்தோம். 

10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி கவர்னராக நானும், முதல்வராக  நாராயணசாமியும் இருக்கிறோம். இது கடவுளின் கட்டளையாகக்கூட இருக்கலாம். அதிகாரிகள் சட்டவிதிகளுக்கு உட்பட்டும், பட்ஜெட்டைப் பாதுகாப்பவர்களாகவும்  இருக்க வேண்டும்.  அதிகாரிகள்  திறமையானவர்களாகவும், ஆசிரியர்களாகவும் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், அதிகாரிகளிடம் வரும் கோப்பில் தவறு செய்தால் அது இறுதிவரை அப்படியே இருக்கும். புதுச்சேரியை  வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவாக்க இரண்டு ஆண்டுகளே போதும்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க