`காமாலைக் கண்கள்..!’ - மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கும் தமிழிசை | Tamilisai slams Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 08:16 (02/02/2018)

கடைசி தொடர்பு:11:26 (02/02/2018)

`காமாலைக் கண்கள்..!’ - மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கும் தமிழிசை

’மு.க.ஸ்டாலின் காமாலை கண்களோடு மத்திய அரசை விமர்சிக்கிறார்’ என்று  தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சாடியுள்ளார்.

tamilisai
 

2018-19ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல்செய்தார். மத்திய அரசின் இந்த பட்ஜெட் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். பட்ஜெட்குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் ’மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நிதிநிலை அறிக்கை, தமிழகத்துக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக ரயில்வே திட்டங்கள், நதிநீர் இணைப்பு, ஒகி புயல் பேரிடர் நிவாரண நிதி போன்றவை குறித்து, பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது, மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த பட்ஜெட்டில் தமிழக மக்களின் நலன் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு, தி.மு.க சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு தமிழிசை எதிர்வினையாற்றி உள்ளார். இன்று காலை அவர் ட்விட்டரில் ‘எல்லாதரப்புக்கும் நன்மைதரும் பூமாலை பட்ஜெட்டை காமாலைக் கண்களோடு பார்த்து விமர்சிக்கிறார்’ என்று ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார். 
மேலும் ‘மோடி எதிர்ப்பு எனும் கறுப்புக்கண்ணாடியை இல்லை இல்லை மோடி வெறுப்புக்கண்ணாடியை கழற்றி விட்டு பட்ஜெட்டை படித்தால் தமிழகத்துக்கான திட்டங்கள் தெரியும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சமீப காலமாகவே பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை ரைமிங்காக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க