வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (02/02/2018)

கடைசி தொடர்பு:11:42 (02/02/2018)

வீடியோ மிமிக்ரி, வழக்குகளின் ரசனை! விபத்தைத் தடுக்க மதுரை டிராஃபிக் போலீஸின் நகைச்சுவை ப்ளான்!

மகேஷ் குமார் அகர்வால்

 

சாலை பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக மதுரையில் மோட்டார் வாகன ஓட்டுநர்களுக்காகக் காவல் துறையின் விழிப்பு உணர்வு செய்திகொண்ட பிரசார வாகனத்தை மதுரை மாநகரக் காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கிவைத்தார். அந்த வாகனம் இன்று (2.2.17) முதல் மதுரை மாநகர் முழுவதும் விழிப்பு உணர்வுப் பிரசார நகைச்சுவை கொண்ட வீடியோவுடன் ஒளிபரப்பாக உள்ளது.

இதுதொடர்பாகக் காவல்துறை ஆணையர் கூறுகையில், ``சாலையில் மோட்டார் வாகன விபத்துகளைத் தடுப்பதற்காக மதுரையின் முக்கியமான வீதிகளில், சந்திப்புகளில் இவ்வாகனம் சென்று பிரசாரத்தை முன்னெடுக்கும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்பு உணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சாலை பாதுகாப்பைப் புறக்கணிக்கும் நபர்களுக்கு சிறப்பு விழிப்பு உணர்வு வழங்கப்படும். மதுரையில் உள்ள முக்கியச் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பொருத்தப்பட்ட கேமராக்கள் பழுதாகியிருந்தால் அவை சரி செய்யப்படும். 

இந்த ஆண்டு இவற்றையெல்லாம் படிப்படியாகக் குறைப்பதற்கு மாநகர போக்குவரத்துக் காவல்துறை முயன்றுவருகிறது. நகரின் முக்கியமான சிக்னல்களில் ஜீரோ ஹவர் முறை கொண்டு வரப்படும்' என்றார்.

பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து விழிப்பு உணர்வு செய்யப்படும் இந்த வீடியோ சீரியஸாக அமைக்கப்படவில்லை. இந்த வீடியோவை நகைச்சுவையுடன் கூடிய  விழிப்பு உணர்வு வீடியோவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அலட்சியம் காட்டாமல் கவனமாக நின்று இந்த வீடியோவைப் பார்த்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோவில் மிமிக்ரி, மதுரையின் வட்டார வழக்கு உள்ளிட்டவற்றை ரசனையாகத் தயார் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.