வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (02/02/2018)

கடைசி தொடர்பு:11:41 (02/02/2018)

`போராடுவது ஒவ்வொரு மாணவரின் கடமை!' - போராளி வளர்மதி பளீச்

நெடுவாசல் போராட்டத்தை ஆதரித்து துண்டு பிரசுரம் கொடுத்ததற்காக குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பெரியார் பல்கலைக்கழக மாணவி போராளி வளர்மதி தற்போது பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து துண்டுப் பிரசுரம் கொடுத்துவருகிறார். அதையடுத்து உளவுத்துறையும், காவல்துறையும் அவரை நோட்டமிட்டுவருகிறது.

இதுபற்றி சமூக ஆர்வலர் வளர்மதி, ``பொது நல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சார்பாக மாணவர்கள்  காலையில் கல்லூரி ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பும், மாலையில் கல்லூரி முடிந்த பிறகு ஒரு மணி நேரமும் பேருந்துகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து பேருந்துக் கட்டண உயர்வு எதிர்ப்புத் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்துவருகிறோம். இந்த ஆட்சியாளர்கள் பேருந்துக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திவிட்டு தற்போது பொதுமக்களை பிச்சைக்காரர்களாக நினைத்து 5 பைசா, 10 பைசா குறைக்கிறார்கள். கட்டண உயர்வைத் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.

பேருந்துக் கட்டண உயர்வால் மாணவர்களும் வெகுஜன மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதையடுத்து, மாணவர்கள் போராடினால் காவல்துறை தடியடி நடத்துவதும், கைதுசெய்வதும் சட்ட விரோதமானது. போக்குவரத்து ஊழியர்களின் 7000 கோடி பணத்தைக் கொடுக்காமல் பொருளாதார நெருக்கடியில் அரசு தவிப்பதாக கூறிவிட்டு எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடத்துவதும், எம்.எல்.ஏ-க்கள் சம்பளம் உயர்த்திக்கொள்ளுவதற்கும் நியாயமா? அதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது.

மாணவர்கள் போராடினால் படிப்பு பாதிக்கும் என்று கூறும் அதி மேதாவிகளுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் நீட் தேர்வை புகுத்துவது சரியா? பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பது ஒவ்வொரு மாணவரின் சமுதாயக் கடமை. அந்தக் கடமையைதான் செய்கிறோம். ஆனால், உளவுத்துறையும், காவல்துறையும் தொடர்ந்து மிரட்டும் தொணியில் நடந்துவருகிறது'' என்றார்.