விகடன் செய்தி எதிரொலி! - அலைக்கழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தாயின் கோரிக்கை நிறைவேறியது | Malar Kodi got Three Wheeler now

வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (02/02/2018)

கடைசி தொடர்பு:10:18 (02/02/2018)

விகடன் செய்தி எதிரொலி! - அலைக்கழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தாயின் கோரிக்கை நிறைவேறியது


கடந்த 30-ம் தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே கால்கள் இல்லாமல் ரோட்டில் தவழ்ந்து வந்த தாயின் கஷ்டத்தை `மூன்று சக்கர வண்டிக்காக அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளி' என்று தலைப்பிட்டு உச்சி வெயிலில் போக்குவரத்து நெரிசலில் இரண்டு கால்களும் செயலிழந்த ஒரு தாய், டிராஃபிக் சிக்னலுக்கு இடையே கிராஸ் செய்த காட்சியை  உங்கள் கண் முன் நிறுத்தினோம். அதையடுத்து, சேலம் கலெக்டர் ரோஹிணி அடுத்த நாளே அந்தத் தாய் மலர்க்கொடியை அழைத்து மூன்று சக்கர வாகனத்தைக் கொடுத்திருக்கிறார்.

மாற்றுத்திறனாளி

இதுபற்றி மலர்கொடியிடம் கேட்டதற்கு, ''எனக்குப் பிறவியிலேயே கால்கள் செயலிழந்துவிட்டன. கணவரால் கைவிடப்பட்டிருந்த என்னைப் பாதுகாத்த என் தம்பிக்கும் தற்போது கை, கால்கள் வராமல் போனதால், தண்ணீர் எடுக்கக்கூட ஆள் இல்லாமல் தவித்து வந்தேன். பல ஆண்டுகளாக மூன்று சக்கர வண்டி கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வருவேன். வீட்டில் இருந்து தவழ்ந்து வந்து பஸ் ஏறி, சேலம் ஜி.ஹெச். பஸ் நிறுத்தத்தில் இறங்கி தவழ்ந்து வந்து கலெக்டரிடம் புகார் கொடுப்பேன்.

ஆனால், இதுநாள்வரை மூன்று சக்கர வண்டி கிடைக்காமல் இருந்தது. 3 நாள்களுக்கு முன்பு என்னுடைய கஷ்டத்தை விகடனில் எழுதியிருந்தார்கள். அதையடுத்து, என்னை உடனே கலெக்டர் அலுவலகத்துக்குக் கூட்டி வந்து கலெக்டரம்மா மூன்று சக்கர வண்டி கொடுத்தாங்க. வண்டி கொடுக்கும்போது, ''உங்க கஷ்டத்தை அறிந்து உடனே வண்டி கொடுத்திருக்கிறோம். மேற்கொண்டு உதவிகளும் செய்கிறோம். பத்திரமாக வீட்டுக்குப் போங்கம்மா''ன்னு என் பொண்ணு மாதிரி சொன்னாங்க. அவங்க எந்த ஒரு நோய்நொடியும் இல்லாமல் நல்லா இருக்கணும்.

நான் பெத்த மகனை ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போதே என் கணவர் மும்பைக்கு எடுத்துட்டுப் போயிட்டார். இப்ப அவனுக்கு 15 வயதுக்கு மேல் இருக்கும். எப்படி இருப்பான்னுகூடத் தெரியல. அவனே அம்மா இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு என்னைப் பார்க்கும்போது நான் அடையும் சந்தோஷத்தைப்போல எனக்கு இந்த வண்டியும் ஒரு பிள்ளையைப் போல இருக்கு. இந்த வண்டி கொடுக்க ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.


[X] Close

[X] Close