வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (02/02/2018)

கடைசி தொடர்பு:11:26 (02/02/2018)

``ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை!’’ - பீட்டா வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிராக பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 


ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கும் விதமாக தமிழக அரசு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இந்த சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகின்றன. அதேபோல், கர்நாடகாவில் கம்பளா எனும் எருது விடும் போட்டிக்கு அனுமதி அளிக்கும் வகையில் அம்மாநில அரசு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பீட்டா மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

இந்தநிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு இன்று (2.2.2018) உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமைப்பார். அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்ட பின்னர், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். அதேநேரம், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. தமிழக அரசின் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.