`மாப்ளே... அந்தக் காளையை நான் அடக்கிக்காட்டுறேன்டா' - மாடுபிடி வீரர்களிடம் நின்று விளையாடிய காளைகள்! | Jallikattu grandly organized in Pudukkottai

வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (02/02/2018)

கடைசி தொடர்பு:11:27 (02/02/2018)

`மாப்ளே... அந்தக் காளையை நான் அடக்கிக்காட்டுறேன்டா' - மாடுபிடி வீரர்களிடம் நின்று விளையாடிய காளைகள்!

'மழை விட்டாலும் தூவானம் விடாது' என்பதுபோல, ஜல்லிக்கட்டு விழாக்கள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஓய்ந்து போயிருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், குலமங்கலம் அருகில் உள்ள மலைக்கோயில் ஜல்லிக்கட்டு மாவட்டத்தில் படுபிரபலம். ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தைக் கொண்டாடும் விதமாக மலைக்கோயில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இந்த வருட ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. இதில், கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தூக்கி அடிக்கும் விதமாக  இதில் கலந்துகொண்ட காளைகள் சீறிப் பாய்ந்து, திமிறி, மாடுபிடி வீரர்களைத் துவம்சம் செய்தன. பல காளைகள் மாடுபிடி வீரர்கள் மத்தியில் நின்று விளையாடின. தங்களை நெருங்குபவர்களை அருகில் அண்டவிடாமல் போக்குக்காட்டி சுற்றிச்சுற்றி வந்தன.

கருப்பு வெள்ளை காளை ஒன்று மாடுபிடி வீரர் ஒருவரைக் கீழே தள்ளி, ஒரு நிமிடத்துக்கு மேலாக அவரை புரட்டி எடுத்துக்கொண்டு இருந்தது. பார்வையாளர்கள் பலரும் இந்தக் காட்சியை பெரும் ஆரவாரத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்போது, 'மாப்ள..அந்தக் காளையை நான் அடக்கிக் காட்டுறேன்டா'என்று சக வீரரிடம் சூளுரைத்து விட்டு வந்தார் ஒருவர்.

சொன்னபடியே அந்தக் காளையின் திமிலைப் பிடித்தார். சில நிமிடங்கள் திமிறிய காளை, அப்படியே அடங்கி பரமசாதுவாக நின்றுவிட்டது. இப்போது அந்த மாடுபிடி வீரருக்கு ஆதரவாகக் கூட்டம் ஆர்ப்பரித்தது. இன்னும் சில காளைகள் வாடிவாசலை விட்டுக் கிளம்பும்போதே, ஐந்தடி உயரத்துக்குப் பாய்ந்து, மாடுபிடி வீரர்களை சிதறடித்தது. இப்படியான காளைகளால் ஜல்லிக்கட்டு நொடிக்கு நொடி, 'என்ன நடக்குமோ.. ஏது நடக்குமோ' என்ற பதைபதைப்புக் குறையாமல் கடைசி வரை நீடித்தது.

காளைகளின் எண்ணிக்கையைவிட மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பார்வையாளர்கள்  கடந்த வருடத்தைவிட அதிகமாக வந்திருந்தனர். இந்த ஜல்லிக்கட்டில் காவல்துறையைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் உட்பட 30 நபர்களுக்கு சிறிதும் பெரிதுமாக காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த தற்காலிக மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை தரப்பட்டது. உயிர் பலி ஏதும் இல்லை. முன்னதாக, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர்  இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  சு. கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.