`ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பொருள்கள் சோதனைக்கு நிதி ஒதுக்குங்கள்'- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

’உலக நாகரிகத்தின் தொட்டில்’ என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கார்பன் சோதனைக்கு உட்படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, ஆதிச்சநல்லூரில் 13 வருடத்துக்கு முன்பு நடந்த ஆய்வு அறிக்கை வெளிட வேண்டும். இதுவரை நடந்த அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைத்து வைத்திடவும், 13 வருடத்துக்கு முன்பு நிறுத்தப்பட்ட அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து நடத்திடவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் காமராசு மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.

”அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களுக்கு கார்பன் சோதனை நடத்த வேண்டும். இச்சோதனைக்கு தேவைப்படும் நிதி குறித்து அரசுக்கு அகழாய்வு செய்த ஓய்வுபெற்ற தொல்லியல்துறை கண்காணிப்பாளர்  இரண்டு வாரத்தில் அறிக்கை தர வேண்டும். இந்த அறிக்கையின்படி தேவையான நிதியை அரசு அளிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதுகுறித்து எழுத்தாளர் காமராசுவிடம் பேசினோம், ”ஹரப்பா, மொகஞ்சதாரோவை ஆய்வு செய்த வங்காள அறிஞர் பானர்ஜியே இவை இரண்டிற்கும் முந்தையது ஆதிச்சநல்லூர் நாகரிகம்தான் எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதன்முதலில் கடந்த 1876-ல் நடந்த முதல் அகழாய்வு இதுதான். இந்த ஆய்வை நடத்திய யாகோர் இதில் கண்டெடுத்த பொருள்கள் ஜெர்மன் நாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1902-ல், 2-ம் ஆய்வை நடத்திய அலெக்சாண்டர் இரியா தன் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்த 2004 மற்றும் 2005-ல் ஓய்வுபெற்ற தொல்லியல் கண்காணிப்பாளர் தியகா சத்தியமூர்த்தி தலைமையிலான குழு ஆய்வு 114 ஏக்கரில் 60 மீ. நீளம், 60 மீ. அகலத்தில் ஆய்வு செய்ததில்,  பழமையான இடுகாடு இருந்ததாகவும் அதில் எலும்புகள், அரிய வடிவ அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள், ஆயுதங்கள், பழங்காலப் பொருள்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. அந்தப் பொருள்களும் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், “இங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கார்பன் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது. இதன் ஆய்வறிக்கை விரைவில் வெளிடப்பட வேண்டும். இதில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள், இங்கே அருங்காட்சியகம் அமைத்துக் காட்சிப்படுத்த வேண்டும்  என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!