இலங்கையிலிருந்து 6,500; இந்தியாவிலிருந்து 2,500 பக்தர்கள் பங்கேற்பு! களைகட்டப்போகும் கச்சத்தீவு திருவிழா

இம்மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்  திருவிழாவில் இலங்கையில் இருந்து 6,500  பக்தர்கள்  பங்கேற்க உள்ளதாக  யாழ் மாவட்ட  ஆட்சியர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு  திருவிழாவில் இலங்கை பக்தர்கள் 6500 பேர் பங்கேற்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய வருடாந்திர திருவிழா பிப்ரவரி  மாதம் 23, 24 -ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை இலங்கையில் இருந்து 6,500 பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும், பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட ஆட்சியர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த  கலந்துரையாடல் யாழ் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சியர் வேதநாயகன், ''கச்சத்தீவில் இம்முறை  இலங்கையில் இருந்து 6,500 யாத்திரீகர்களும், இந்தியாவில் இருந்து 2,500 யாத்திரீகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவுக்கான  பிரதான பொறுப்பைக் கடற்படையினர் ஏற்றுள்ளனர். அதேபோன்று ஏனையத் துறையினர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதன் படி தத்தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலன் கருதி நிரந்தரக் கழிப்பறை வசதிகள் மற்றும்  தற்காலிகக் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவுகளில் இருந்து பயணிகளை ஏற்றிவரும் பணியில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படவுள்ளது. பயணிகள் பாதுகாப்பு அங்கி அணியவேண்டும் என்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்முறை போலீஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் படகு சேவை இடம்பெறும்போது கடற்படை ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கச்சத்தீவு பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆலயத்துக்குச் செல்லும் யாத்திரீகர்கள் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம். திருப்பலி நிறைவடைந்த பின்னர், அந்தப் பகுதியில் சூழல் மாசு அடைவதால் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்'' எனத்  தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!