'படத்தில் போலீஸ்... நிஜத்தில் கடத்தல் தலைவன்'! - மனைவிக்காகக் களமிறங்கிய நடிகர்

கடத்தல் கும்பலைச் சேர்ந்த முத்து

 வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளித் தாளாளரைக் கடத்திய வழக்கில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார், துணை நடிகர் அரி. மனைவியின் ஆசிரியைப் பணி பறிபோனதால் இந்தக் கடத்தலில்  அவர் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள ஆசிரியர் நகரில் குடியிருப்பவர், செந்தில்குமார். இவர், வாணியம்பாடியில் பள்ளி ஒன்றை நடத்திவருவதோடு, அதில் தாளாளராகவும் இருக்கிறார். இவர், கடந்த 19-ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, காரில் வந்த மர்மக்கும்பலால் கடத்தப்பட்டார். செந்தில்குமாரைக் கடத்திய கும்பல், அவருடைய அண்ணனை போனில் தொடர்புகொண்டது. போனில் பேசிய கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர், 'உன்னுடைய தம்பி உயிரோடு வேண்டுமென்றால் 3 கோடி ரூபாயை உடனடியாக நான் சொல்லும் இடத்துக்குக் கொண்டு வா' என்று இணைப்பைத் துண்டித்தது. இதனால், பதறிப்போன செந்தில்குமாரின் குடும்பம், அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்த நேரத்தில், மீண்டும் கடத்தல் கும்பலிடமிருந்து போன் வந்தது. அப்போது, உடனடியாக 3 கோடி ரூபாய் பணமில்லை என்று செந்தில்குமாரின் அண்ணன் தெரிவிக்க, கடைசியில் 50 லட்சம் ரூபாய் எனப் பேரம் படிந்தது. அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு கடத்தல் கும்பல் தெரிவித்த இடத்துக்கு செந்தில்குமாரின் உறவினர்கள் சென்றனர். அப்போது, முகமூடி அணிந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவன், பணத்தை வாங்கிக்கொண்டு செந்தில் குமாரை விடுவித்தான்.
 
 இந்தச் சம்பவத்தைக் கடத்தல் கும்பலுக்குத் தெரியாமல் ரகசிய கேமராமூலம் செந்தில்குமாரின் உறவினர்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை போலீஸிடம் கொடுத்து, கடத்தல் கும்பல்மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனர். வீடியோவில் உள்ள கடத்தல் குடும்பலைச் சேர்ந்த ஒருவனின் முகம் சரியாகத் தெரியவில்லை என்றாலும், சில தகவல்களைக்கொணடு வாணியம்பாடி போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான், கடத்தல் கும்பல்குறித்த முக்கியத் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்தன. இதையடுத்து, போலீஸார் கடத்தல் கும்பலைத் தமிழகம் முழுவதும் தேடினர்.
 
 இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸார் கூறுகையில், "பள்ளித் தாளாளர் செந்தில்குமார் கடத்தல் சம்பவத்தில், தலைவனாகச் செயல்பட்டது, துணை நடிகர் அரி என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்தது. உடனடியாக அரி மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தோம். இந்தச் சமயத்தில், சென்னை செங்குன்றத்தில் பதுங்கியிருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த கலீம், முத்து ஆகியோரைக் கைதுசெய்தோம். அவர்களிடமிருந்து 14 லட்சம் ரூபாயைக் கைப்பற்றினோம். முத்து, போலீஸிடம் சிக்காமலிருக்க மொட்டை அடித்துள்ளார். அடுத்து, தலைமறைவாக இருந்த அரி மற்றும் உதயகுமாரைத் தேடிவந்தோம்.

 துணை நடிகர் அரி, பள்ளி தாளாளர் செந்தில்குமார்

 அரி, கோவையில் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால், கோவைக்கு விரைந்துசென்றோம். ஆனால், அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். தற்போது, திருச்சியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்படி, அங்கு போலீஸ் டீம் சென்றுள்ளது. இந்தச் சமயத்தில் துணை நடிகர் அரி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். இதனால், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவுசெய்துள்ளோம்" என்றனர். 

 போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், " 'என்னை அறிந்தால்' படத்தில் அரி, போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதில், அஜித்துடன் சேர்ந்து அரி மற்றும் போலீஸார் துப்பாக்கிமுனையில் கடத்தல் கும்பலை சுற்றி வளைப்பதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இது தவிர, இன்னும் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சி சீமானும் அரியும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவும் எங்களிடம் சிக்கின. செந்தில்குமார் நடத்திய பள்ளியில் ஆசிரியையாக அரியின் மனைவி பிரியா, சில மாதங்களுக்கு முன்பு வரை வேலைபார்த்துள்ளார். பிரியா மீது பள்ளி நிர்வாகத்திடம் பல புகார்கள் சென்றுள்ளன. இதனால், பள்ளி நிர்வாகம் பிரியா மீது நடவடிக்கை எடுக்கத் தயாரானபோது, அவரே வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேறு பள்ளியில் சேர்ந்துள்ளார். 

 பள்ளி நிர்வாகத்தைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் பிரியாவுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், படவாய்ப்புகள் இல்லாததால், பணத் தேவையில் அரி இருந்துள்ளார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று செந்தில்குமாரை கடத்தும் திட்டம் வகுக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த கூலிப்படையினர்மூலம் செந்தில்குமாரைக்  கடத்த, அரிதான் தலைவனாக இருந்துள்ளார். செந்தில்குமாரைக் கடத்தி 50 லட்சம் ரூபாயைப் பறித்த கடத்தல் கும்பல், அந்தப் பணத்தைப் பங்கு பிரித்தனர். பிறகு, அவர்கள் தனித்தனியாகப் பிரிந்துசென்று தலைமறைவாகிவிட்டனர்.

 சீமானுடன் நடிகர் அரி இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ.

தலைமறைவாக இருக்க, கோவையைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்துள்ளார். வெல்டிங் தொழிலாளியும் அரியும் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். வெல்டிங் தொழிலாளியிடம் அரி கடனாகப் பணமும் வாங்கியுள்ளார். கடத்தல்மூலம் கிடைத்த பணத்தில் 35 ஆயிரத்தை  வெல்டிங் தொழிலாளியிடம் கொடுத்துவிட்டு, திருச்சிக்கு தப்பிச் சென்றுவிட்டார். திருச்சியில் அவரைப் பிடிப்பதற்குள், சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களைத் தொடர்ந்து தேடிவருகிறோம்"என்றார். 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் துணை நடிகர் அரி இணைந்து எடுத்த புகைப்படம்குறித்து சீமானிடம் கேட்டதற்கு, 'அரிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் நடிகராக இருப்பதால், என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கலாம்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!