வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (02/02/2018)

கடைசி தொடர்பு:19:19 (02/02/2018)

ஓடும் ரயிலில் விமானப்படை ஊழியரின் மனைவிக்கு நடந்த கொடூரம்! சிக்கிக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர்

வேலியே பயிரை மேய்ந்த கதைபோல, ஓடும் ரயிலில் விமானப்படை ஊழியரின் மனைவிக்கு பாலியல் தொந்தரவுகொடுத்த சி.பி.சி.ஐ.டி. சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்,  காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை சூலூர் விமானப்படை ஊழியராக இருப்பவர், அசோக்குமார். இவர், தன் மனைவியோடு சென்னை சென்ட்ரலிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் 3-ம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் கோவைக்கு வந்துகொண்டிருந்தார். அதே பெட்டியில், சென்னை சென்ட்ரலில் ஏறிய நீலகிரி மாவட்டம், கூடலூர் சி.பி.சி.ஐ.டி., சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் போதையில் இருந்துள்ளார். இவரும் சென்னையிலிருந்து கோவைக்கு வந்திருக்கிறார். இரவுப் பயணம் என்பதால், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் படுத்து உறங்கினர்.  

இந்நிலையில், உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் போதையில் அசோக்குமாரின் மனைவியிடம் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த அசோக்குமாரின் மனைவி, முதலில் எச்சரிக்கை செய்துவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டார். தொடர்ந்து அந்த எஸ்.ஐ., பாலியல் ரீதியாகத் தொந்தரவுசெய்ததால் கத்திக் கூச்சலிட்டார். அதையடுத்து, அவரின் கணவரும் பயணிகளும் எழுந்து அந்த எஸ்.ஐ சந்திரசேகரனைத் திட்டினார்கள். அவர், போதையில் வாக்குவாதம்செய்து, தகாத வார்த்தையால் திட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அசோக்குமாரும் பொதுமக்களும் சேர்ந்து, சந்திரசேகரனைப் பிடித்து ஈரோடு ரயில் நிலைய போலீஸிடம் ஒப்படைத்தனர். தற்போது, ஈரோடு ரயில்வே போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் லாரன்ஸ். சந்திரசேகரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்.