`நாற்காலி பயத்தைக் காட்டுகிறது' - முதல்வரை வறுத்தெடுத்த குஷ்பு

``மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழகத்துக்குப் பயன் அளிக்கும் திட்டங்கள் ஏதும் இல்லை. ஆனாலும், தனது நாற்காலியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியது இருப்பதால் இந்தப் பட்ஜெட் தமிழகத்துக்குப் பயனுள்ளது என முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார்” என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

 

நெல்லை மாவட்டத்தில்  நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தூத்துக்குடி விமான நிலையம் வந்த குஷ்பு செய்தியாளர்களிடம், “மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை சிறப்பானதாக இல்லை. அவர் ஒரு வழக்கறிஞர்தான் பொருளாதாரம் தெரிந்தவர் அல்ல. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் வழங்கறிஞர் என்றாலும், பொருளாதாரம் குறித்து பல வெளிநாடுகளுக்குச் சென்று தெரிந்துகொண்டு வந்தவர். மன்மோகன் சிங் போல உலகப் பொருளாதார மேதை இல்லை. ஒவ்வொருதுறைக்கும் அந்தந்த சிறப்பு பெற்றவர்கள் இருந்தால்தான் அந்தந்த துறை சார்ந்து ஆக்கபூர்வமான திட்டங்கள் வெற்றி பெறும்.  

எந்தெந்த மாநிலங்களில் தேர்தல் வர உள்ளதோ அந்தந்த மாநிலங்களுக்குத் திட்டங்களும் கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்சியைப் பிடிப்பதற்காக மட்டுமே இதன் நோக்கம். ஊழல் இல்லாத ஆட்சி எனப் பிரதமர் மோடி சொல்லி வருகிறார். ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் பா.ஜ.க தோற்றது ஏன். பா.ஜ.க ஆட்சியிலும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. குடியரசுத் தலைவர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை அனைவருக்கும் பல மடங்கு ஊதிய உயர்வு அளித்துள்ளது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதைத்தான் உணர்த்துகிறது. இவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தால்தான் அவரவர் வீடுகளில் உணவு முதல் அடிப்படை தேவைகள் வரை அனைத்தும் பூர்த்தி ஆகுமா?

தங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைப் பெறுவதற்காக ஒருவார காலம் போராட்டங்களில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்யப்படும் என அரசு அறிவித்தது. அப்படியானால், சட்டசபைக்கு வராத எம்.எல்.ஏ-க்களுக்கு எத்தனை நாள் வரவில்லையோ அத்தனை நாளுக்கான ஊதியத்தை இந்த அரசால் பிடித்தம் செய்ய முடியுமா. இந்தப் பட்ஜெட்டில் தமிழகத்துக்குப் பயன்தரும் திட்டம் ஏதும் இல்லை எனத் தெரிந்தும் பட்ஜெட் பயனுள்ளதாகக் கூறிய அவரது கருத்து நாற்காலி பயத்தையே காட்டுகிறது. பாலியல் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாலியல் தொடர்பான சட்டங்களை மாற்றி அமைக்கப்பட வேண்டும். கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும்” என்றார். வைரமுத்து சர்ச்சை, ரஜினி கமல் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார் குஷ்பு.

    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!