' 15 நாள் பொறுத்திருங்கள்...! '  - உடன்பிறப்புகளுக்கு உறுதியளித்த ஸ்டாலின் | Just wait for 15 days, Stalin promises to party cadres

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (02/02/2018)

கடைசி தொடர்பு:15:53 (02/02/2018)

' 15 நாள் பொறுத்திருங்கள்...! '  - உடன்பிறப்புகளுக்கு உறுதியளித்த ஸ்டாலின்

தி.மு.கவினரிடம் ஆய்வு நடத்தும் ஸ்டாலின்

றிவாலயத்தின் தன்னந்தனியாக அமர்ந்து கொண்டு தொண்டர்களின் குறைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். ' ஆய்வுக் கூட்டத்தால் சீனியர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆய்வை நடத்திக் கொண்டிருக்கிறார் செயல் தலைவர்' என்கின்றனர் தி.மு.கவினர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் படுதோல்விக்குப் பிறகு கட்சியை சீரமைக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறார் ஸ்டாலின். இதன் ஒருபகுதியாக, தொண்டர்களின் மனக்குறையைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதுகுறித்து ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ' கட்சியின் நலன் பெருக்கும் இந்தக் களஆய்வின் போது, நீங்கள் பொறுப்பு வகிக்கும் பகுதியில், அதிலும் உங்கள் மாவட்டத்தில் உள்ள கட்சியின் நிலையைப் பற்றித் தெரிவிக்க விரும்பும் புகார்கள், கருத்துகள், ஆலோசனைகளை எல்லாம் சிறு கடிதமாக எழுதி, களஆய்வு நடக்கும் இடத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம். அந்தக் கடிதங்களை ஆய்வு செய்ய, என்னுடையக் கட்டுப்பாட்டில் குழு அமைக்கப்படும்' எனத் தெரிவித்திருந்தார். இதனால் மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது. நேற்று கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். கூட்டத்தைத் தொடங்கி வைத்துவிட்டு பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மை நிலையச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் சென்றுவிட்டனர். 

இதன்பின்னர், அன்பில் பொய்யாமொழி மகேஷ் உள்பட ஒருசிலர் மட்டும் அங்கே இருந்தனர். இதன்பிறகு நிர்வாகிகளிடம் பேசிய ஸ்டாலின், ' கழகத்தை வலிமையோடு நடத்திச் செல்வதற்கு நீங்கள் தெரிவிக்கும் புகார்கள் மிக அவசியமானவை. தலைமையின் மீதோ மூத்த நிர்வாகிகள் மீதோ புகார் கூறுவதற்கு நீங்கள் யாரும் தயங்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மீது புகார் கூறினால், நம் மீது நடவடிக்கை எடுத்துவிடுவார்களோ என நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் கூறும் புகார்களின் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்' எனப் பேசியிருக்கிறார். இதன்பிறகு, கோவை மாவட்ட நிர்வாகிகள் சிலர், மாவட்டத்தில் உள்ள குறைகளைக் கூறியுள்ளனர். பகுதிக் கழக செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மீது புகார் கூற, ' அந்த நிர்வாகிகளின் பெயர்களைக் கூறுங்கள்' எனக் கேட்டு எழுதிக் கொண்டார்.

ஒவ்வொருவரின் புகார்களையும் நிதானமாகக் கேட்டறிந்தது தொண்டர்கள் மத்தியில் ஆறுதலை அளித்துள்ளது. இதன்பிறகு, கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சைவ உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொண்டர்களுடன் உணவு அருந்த வசதியாக ஸ்டாலினுக்கு பக்கத்தில் நான்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஸ்டாலினுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் கோவை, கணபதி பகுதிக் கழக செயலாளர் லோகு அமர்ந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் உட்கார முயற்சித்தார். அவருக்குப் பதில் அளித்த ஸ்டாலின், ' சிறிய நிர்வாகிகள் என் பக்கம் அமரட்டும்' எனக் கூறிவிட்டார். கூட்டம் முடியும் வரையில் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் குறைகளைக் கேட்டறிந்திருக்கிறார் ஸ்டாலின். 

தி.மு.கவினருடன் உணவருந்தும் ஸ்டாலின்

ஸ்டாலின் முன்னெடுக்கும் ஆய்வு குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், " கழகத்தின் மூத்த முன்னோடிகளைக் கலந்து ஆலோசிக்காமல் இப்படியொரு ஆய்வை, ஸ்டாலின் மேற்கொள்வதில் சீனியர்கள் பலருக்கு உடன்பாடில்லை. தன்னை ஒரு தனித்துவம் வாய்ந்த தலைவராக ஸ்டாலின் காட்டிக் கொள்வதில் தவறில்லை. அதே சமயம் கட்சியைப் பொறுத்தவரையில் கூட்டுத் தலைமைதான் பல்வேறு காலகட்டங்களில் வெற்றியைத் தேடித் தந்துள்ளது. ஐம்பெரும் தலைவர்களை முன்னிறுத்தித்தான் அரசியல் செய்தார் அண்ணா. எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை அவர் பயன்படுத்திக் கொண்டார். இந்தக் கூட்டுத் தலைமைதான் 62-ம் ஆண்டு தேர்தலில் முக்கியத் தலைவர்கள் தோற்றபோதும் கட்சியை அழியாமல் பாதுகாத்துக் கொண்டது. அதேபோல், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், சாதிக் பாட்ஷா, ஆதித்தனார், அன்பில் தர்மலிங்கம் உள்பட பலரை முன்னிறுத்தித்தான் அரசியல் செய்தார் கருணாநிதி. இதன் காரணமாக, 73-ம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தலில் மூன்றாம் இடம் பெற்றபோதும், தி.மு.க டெபாசிட்டைப் பறி கொடுக்கவில்லை. 74-ம் ஆண்டு கோவையில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் இடம் கிடைத்தும் டெபாசிட்டைத் தக்கவைத்துக் கொண்டது தி.மு.க. 

ஆனால், ஆர்.கே.நகர் களம் அப்படிப்பட்டதல்ல. மிகக் கவனமாக இருக்க வேண்டிய இடத்தில் டெபாசிட்டைப் பறிகொடுத்தது மட்டுமல்லாமல் வாக்கு வங்கி குறித்த விழிப்பு உணர்வும் இல்லாமல் இருப்பதுதான் வேதனையளிக்கிறது. தினகரனின் சொந்த சமூகத்தின் பலம் ஒருபுறம் இருந்தாலும் கிறிஸ்துவ, இஸ்லாமிய வாக்குகளையும் அவர் பெற்றதை தி.மு.க தலைமை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இப்போது களத்தில் போட்டி அதிகரித்துவிட்டது. அண்ணா, கருணாநிதி போல அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நிலையில் ஸ்டாலின் இல்லை. இதைக் கருணாநிதியே பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறார். செயல் தலைவராக கருணாநிதியே ஸ்டாலினை அடையாளம் காட்டியதால்தான், சீனியர்கள் பலர் மௌனமாக இருக்கின்றனர். செயல் தலைவரின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்திருந்தால், அவரது ஆய்வு முயற்சியை வரவேற்பதில் எந்தவிதத் தயக்கமும் இருந்திருக்காது. ' ஸ்டாலின் ஒன்றும் கருணாநிதி அல்ல' என்பதையும் சீனியர்கள் பலர் தெளிவாக உணர்ந்து வைத்துள்ளனர். தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொண்டு ஆய்வு நடத்துவதையும் அவர்கள் யாரும் ரசிக்கவில்லை" என்றார் விரிவாக.

ஆய்வுக் கூட்டத்தின் நிறைவில், 'ஸ்டாலின் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் கழகத்தில் பெரும் கலகத்தை விளைவிக்கலாம்' என்ற விவாதங்களும் கட்சிக்குள் களைகட்டியிருக்கின்றன. 


டிரெண்டிங் @ விகடன்