வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (02/02/2018)

கடைசி தொடர்பு:16:04 (02/02/2018)

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்ட சசிக்குமார் கொலை வழக்கு!

இந்து முன்னணி சசிக்குமார்

கோவையை அதிரச்செய்த இந்து முன்னணிப் பிரமுகர் சசிக்குமார் கொலைவழக்கு விசாரணை, தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டுள்ளது.

கோவை இந்து முன்னணியின் செய்தித்தொடர்பாளராக இருந்த சசிக்குமார், மர்ம நபர்களால் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி படுகொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம், தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையாளிகளைப் பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டது காவல்துறை. வழக்கின் முக்கியத்துவம் கருதி சில நாள்களிலேயே இந்த வழக்கு (செப்டம்பர் 27-ம் தேதி)  சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு வழக்கு போனதும் விசாரணை வேகமெடுக்க ஆரம்பித்தது. கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் மற்றும் முபாரக் ஆகியோருக்கு இவ்வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களைப்பற்றிய தகவல்கள் கொடுப்பவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவித்து, தேடுதலை முடுக்கியது சி.பி.சி.ஐ.டி போலீஸ். அடுத்தடுத்து அபுதாஹிர்,சதாம்உசேன், சுபேர், முபாரக் ஆகியோர் கைதுசெய்யப்படனர்.

அபுதாஹிர், நிபந்தனை ஜாமீனில் வெளியில் உள்ளார். முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்பட்ட சதாம் உசேன், முபாரக், சுபேர் ஆகியோர் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலைக்குப் பின்னால் பல்வேறு தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றத் திட்டமிட்டு வழக்குப்பதிவு செய்து, சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்கள். சசிக்குமார் கொலைசெய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், தேசியப் புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க