' சட்ட விரோதம் எனத் தெரிந்தும் செய்தார் ஜெயலலிதா!' - சிறுதாவூர் நிலத்தை மீட்கக் களமிறங்கிய விவசாயிகள்  | Jayalalithaa knew it's illegal, still she did it, blames farmers

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (02/02/2018)

கடைசி தொடர்பு:17:17 (02/02/2018)

' சட்ட விரோதம் எனத் தெரிந்தும் செய்தார் ஜெயலலிதா!' - சிறுதாவூர் நிலத்தை மீட்கக் களமிறங்கிய விவசாயிகள் 

சிறுதாவூர் பங்களா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவால் ஆக்கிமிக்கப்பட்ட சிறுதாவூர் நிலங்களை ஏழை மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியுள்ளது. 'பங்களாவின் ஒருபகுதியே ஆக்கிரமிக்கப்பட்டுத்தான் கட்டப்பட்டுள்ளது. நீதிபதி சிவசுப்ரமணியன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் நிலங்களை எஸ்.சி மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்' என்கின்றனர் விவசாய சங்க நிர்வாகிகள். 

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்துக்கு உட்பட்ட சிறுதாவூர் கிராமத்தில் வசித்து வந்த 20 எஸ்.சி குடும்பங்களுக்கு தலா 10 சென்ட் நிலமும் தலா இரண்டரை ஏக்கர் வீதம் பயிரிடும் நிலமும் வழங்கினார் முதலமைச்சர் அண்ணா. ' 53 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலத்தை, மத்திய அரசின் நிலமற்ற விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் எஸ்.சி அல்லாத எவருக்கும் விற்கவோ, வாங்கவோ உரிமை இல்லை' என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டது. ஆனால், 1991-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சித்ரா ஆகியோரால் நிபந்தனையை மீறி நிலம் அபகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை முன்னெடுத்தது. எஸ்.சி மக்களின் நிலங்களை மீட்கக் கோரி, முதல்வராக வந்த கருணாநிதியிடம் மனுவையும் அளித்தனர். நெடிய போராட்டங்களுக்குப் பிறகு நீதியரசர் சிவசுப்ரமணியன் தலைமையில் ஒருநபர் விசாரணைக் கமிஷனை அமைத்தார் கருணாநிதி. ஆணையத்தின் அறிக்கை வெளியாகியும் நிலத்தைப் பறிமுதல் செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

பெ.சண்முகம்இந்நிலையில், ' சிறுதாவூரில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை, அந்தப் பகுதி எஸ்.சி மக்களுக்கே வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். போராட்டத்தின் முடிவில் 330 பேர் கையெழுத்திட்டு கோட்டாட்சியரிடம் புகார் மனுவையும் அளித்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் விவரித்தார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், " எங்களுடைய கோரிக்கை எல்லாம், 'எஸ்.சி மக்களுக்கு அரசு வழங்கிய 53 ஏக்கர் நிலத்தை சசிகலா தரப்பிடம் இருந்து பறிமுதல் செய்ய வேண்டும்' என்பதுதான். ஆனால், ' பங்களாவுக்குள் 32 ஏக்கர் வளைக்கப்பட்டுள்ளது' என்பதைக் கண்டுபிடித்தது ஆணையம்தான். மொத்தம் 85 ஏக்கர் அரசு நிலம் அங்கே இருக்கிறது. ஆணையத்தின் விசாரணையின்போது, சசிகலா உறவினரான சித்ராவின் வழக்கறிஞர், 'பங்களாவுக்குள் இருக்கும் 32 ஏக்கரை எடுத்துக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை' எனத் தெரிவித்தார். அதையும் நீதிபதி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். 'இந்த நிலத்தை மீட்டு நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும்' என்பதை முதல் பரிந்துரையாகக் குறிப்பிட்டிருந்தார். 

' 53 ஏக்கரைப் பொறுத்தவரையில் நிபந்தனையை மீறிப் பயனாளிகள் விற்றுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் இந்த நிலத்தை வழங்கக்கூடாது. எனவே, நிலமற்ற மற்ற ஏழைகளுக்கு இந்த நிலத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்' என இரண்டாவது பரிந்துரையாகக் குறிப்பிட்டிருந்தார். மூன்றாவதாக, ' ஜெயலலிதா இந்த நிலத்தை வாங்கியது தவறு. இதுதொடர்பாக, பட்டா மாறுதல், பத்திரப் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மூன்றும்தான் முக்கியமான பரிந்துரைகள். 2010 மார்ச் மாதமே அறிக்கை கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதே ஆண்டு மே மாதம்தான் அரசு அதனை வெளியிட்டது. அப்போது கருணாநிதி உடல்நலமில்லாமல் இருந்தார். 9.11.2010 ம் ஆண்டு துணை முதல்வராக இருந்த ஸ்டாலினை சந்தித்து, ' ஆணையத்தின் பரிந்துரைகள் மீது நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்கள். உடனே நிலத்தை பறிமுதல் செய்யுங்கள்' என்றோம். 

ஆனால், ஆட்சியில் இருந்தவரையில் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2011-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. அடுத்து வந்த நாட்களில் பங்களாவுக்குள் வெளியில் இருந்த 53 ஏக்கர் நிலத்துக்கும் சேர்த்து முள்கம்பி வேலி போட்டுவிட்டனர். சொல்லப் போனால் பங்களாவின் ஒரு பகுதியே ஆக்கிரமிப்பு நிலத்தில்தான் இருக்கிறது. ஆணையத்தின் பரிந்துரைகளைப் பற்றியெல்லாம் ஜெயலலிதா தரப்பினர் கவலைப்படவில்லை. சட்டவிரோதமான காரியம் என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை. அவர் ஆட்சியில் இருந்ததால் யாராலும் எதுவும் பேச முடியவில்லை. இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று கோட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறோம். சசிகலா, இளவரசி பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும். அரசு நிலம் என்று தெரிந்திருந்தும் பத்திரப்பதிவு, பட்டா மாறுதல் செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 85 ஏக்கர் நிலத்தையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும். அந்த நிலத்தை நிலமற்ற எஸ்.சி மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இறுதியான கோரிக்கை" என்றார் அதிரடியாக. 
 


டிரெண்டிங் @ விகடன்