வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (02/02/2018)

கடைசி தொடர்பு:19:40 (02/02/2018)

`மோடி அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது' - திருவோடு ஏந்தி கண்ணீர்விட்ட விவசாயிகள்

26 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த ரயில்வே திட்டத்தை மோடி அரசு குழிதோண்டிப் புதைவிட்டது. ஜெயங்கொண்டம் டு கும்பகோணம் ரயில்பாதைத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம்  திருவோடு ஏந்திப் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தியதோடு, கண்ணீர் விட்டனர், அரியலூர் விவசாயிகள்.

மத்திய அரசு, புதிய பட்ஜெட்டை நேற்று  தாக்கல்செய்து, பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது. இதில், விருத்தாசலத்திலிருந்து ஜெயங்கொண்டத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கக்கோரி, பல ஆண்டுகளாக பொது மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். அதன் பேரில் புதிய ரயில்பாதை அமைக்க ஆய்வுப் பணிகளும் முடிந்துவிட்டன. ஆனால், இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு, உடனே நிதி ஒதுக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று ஜெயங்கொண்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் திருவோடு ஏந்திப் பிச்சை கேட்கும் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தின்போது, விவசாயிகள் கண்ணீர்விட்டது வேதனையை ஏற்படுத்தியது.

 போராட்டத்தை நடத்திய ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விஸ்வநாதன் பேசுகையில், "விருத்தாசலம் டு ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் ரயில் இயக்கத் திட்டம். இந்த ரயில்வே திட்டம், 26 ஆண்டுகளாக மக்களின் கனவு. 2005-ம் ஆண்டு, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு ரயில்வே அமைச்சர் சாமி கும்பிட வந்திருந்தபோது பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஜெங்கொண்டம் டு கும்பகோணம் ரயில்வே திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார். அதன்பிறகு ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார்கள். என்ன ஆச்சோ ஏதாச்சோ  தெரியவில்லை. அதன்பிறகு இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

நாங்கள், இந்தத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை மனுக்கள் அளித்திருந்தோம். இந்த பட்ஜெட்டில் இந்தத் திட்டம் இடம்பெறும் என்று நினைத்திருந்தோம். ஆனால் மோடி அரசு, எங்களை ஏமாற்றிவிட்டது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஜெயங்கொண்டம் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த உற்பத்திப் பொருள்களை சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கும் எடுத்துச்செல்லலாம். மக்களுக்குதான் அரசாங்கமே தவிர, அரசுக்காக மக்கள் இல்லை. இந்தத் திட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும். இல்லையேல், விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்" என்று எச்சரித்தார்.