``திடீர் வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும்!’’ - முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த புதுவை வணிகர்கள்

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட தொழில் மற்றும் வீட்டு வரி உள்ளிட்டவற்றை அரசு திரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி, காரைக்காலில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.


கடையடைப்பு

இதுகுறித்து இன்று (2.2.2018) செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி வணிகர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கரன், ”புதுச்சேரி அரசு, தொழில் உரிமக் கட்டண வரி, தொழில் வரி, வணிக வளாகம், குடிநீர் மற்றும் மின்சார வரி ஆகியவற்றைத் திடீரென உயர்த்தியுள்ளது. இதனால், வணிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஏற்கெனவே, பல்வேறு காரணங்களால் வணிகர்கள் தொடர்ந்து பல பிரச்னைகளைச் சந்தித்துவரும் நிலையில், வணிகம் தொடர்பான வரித் தொகையை, வணிகர்களிடம் கருத்து கேட்காமலேயே அரசு உயர்த்தியிருக்கிறது. இது, வியாபாரிகளின் ஒட்டுமொத்த வணிகத்தையும் பாதிக்கும் செயல். எனவே, உயர்த்தப்பட்ட அனைத்து வரிகளையும் ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, வரும் 20-ம் தேதி, புதுச்சேரி மாநிலம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்தில், இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன. வரிகளை அரசு ரத்துசெய்யும் வரை எங்களின் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!