வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (02/02/2018)

கடைசி தொடர்பு:20:20 (02/02/2018)

கடன் வாங்கிய பணத்தைக் கையாடல் செய்த சாஃப்ட்வேர் பணியாளர்கள்; மர்மமாக இறந்த பா.ஜ.க பிரமுகர்

கடந்த 4 நாள்களுக்கு முன்னர் மாயமான மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் முரளி என்பவர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் முரளி (48). இவர் கீரத்துறை பா.ஜ.க மண்டலத் தலைவராக' பதவி வகித்து வருகிறார். சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றிலும் அவர் பங்குதாரராக உள்ளார். மனைவி இறந்துவிடவே, 2 குழந்தைகளோடு தன் அண்ணன் வீட்டில் முரளி வசித்து வந்தார் . இவரது தொழில் தேவைக்காக 60 லட்சம் ரூபாயைத் தனியார் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். இவரது நிறுவனத்தில் உடன் பணியாற்றிய சிலர் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 4 நாள்களாக முரளியைக் காணவில்லை என்று அவரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் அவரைத் தேடிக்கொண்டிருந்த நிலையில், தனக்குச் சொந்தமாக மற்றொரு வீட்டில் முரளி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இறந்த அவரது உடலிலிருந்து வெளியான துர்நாற்றத்தின் மூலம் அக்கம்பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் அளிக்க, அவரது உடலைப் போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாகக் கீரத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த முரளியின் தொழில் பங்குதாரர்களாக அவரின் சகோதரர் மற்றும் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகருமான பொன்ராஜ் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் இருப்பதாகப் போலீஸார் தெரிவித்தனர்.