வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (02/02/2018)

கடைசி தொடர்பு:18:43 (02/02/2018)

"தீ வைத்த பெண் காவலரை காவல்துறையினரே மறைக்கின்றனர்" - ஜல்லிக்கட்டு விசாரணை ஆணைய நீதிபதி பேட்டி

'ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நடந்த கலவரத்தின்போது தீவைத்த பெண் காவலரை, காவல்துறையே மறைக்கிறது' என்று விசாரணை ஆணையத் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கூறியுள்ளார்.

 ராஜேஸ்வரன்

ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி ராஜேஸ்வரன், இரண்டாவது கட்டமாக கோவையில் விசாரணை நடத்தி வருகிறார். கடந்த புதன்கிழமை கோவை வந்த அவர், இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடத்தினார். இதுகுறித்து, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேஸ்வரன், "கோவையில், 20 பேருக்கு சம்மன் அனுப்பியதில் 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஆணையம் விசாரிக்க விரும்பும் சிலருக்கும், அடுத்தகட்டமாக சம்மன் அனுப்பப்படும். குறிப்பாக, காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆணையர் ரமேஷ் குமார், நேற்று (1.2.2018) சுமார் 5 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட சிவசேனாதிபதி, ஹிப் ஹாப் தமிழா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படும். அடுத்தகட்டமாக, மதுரையில் விசாரணை நடத்த இருக்கிறோம். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது முன்நின்று நடத்திய, வாக்குறுதிகள் கொடுத்த  சினிமா நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட இருக்கின்றனர். கலவரத்தின்போது தீ வைக்கும் பெண் காவலர் யார் என்றே தெரியவில்லை என காவல்துறை அதிகாரகள் தெரிவிக்கின்றனர். காவல் துறையினர், தீவைத்த பெண் காவலரை மறைப்பதுபோலத்தான் தோன்றுகிறது. அவரை, யாரென்று கண்டுபிடித்துக்கொடுங்கள் என்றுதான் காவல்துறையிடம் கூறிவருகிறோம்" என்றார்.