3 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை! ஆணவக்கொலை வழக்கில் தஞ்சாவூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி  வட்டம், மேல மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர், அமிர்தவல்லி. மாற்றுத்திறனாளி. இவரும், அதே ஊரைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பழனியப்பனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இதற்கு, பழனியப்பனின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் திருப்பூர் சென்றுவிட்டனர். சுமார் ஒன்றரை வருட காலம் திருப்பூரில் வசித்துவந்த நிலையில், இருவருக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. இருவரும் தனியாகக் குழந்தையை கவனிக்க முடியாமல் போகவே அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதை அறிந்த பழனியப்பனின் சகோதர்கள் ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன், மகேந்திரன் மற்றும் அவர்களது நண்பர் துரைராஜ் ஆகியோர், சாதி மாறி திருமணம் செய்த கோபத்தில் இவர்களை ஆணவக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். திட்டப்படி, 2014 ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி நள்ளிரவு, மேலமருதூர் வளைவு அருகே அமிர்தவல்லி, பழனியப்பன் ஆகிய இருவரையும் பழனியப்பனின் சகோதரர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்து விட்டனர். அதோடு நில்லாமல் பிறந்து 40 நாள்களே ஆன அந்தப் பச்சிளம் குழந்தையையும் வெட்டிக் கொன்று, மூவரின் உடல்களையும் வயல்களில் வீசிவிட்டுச் சென்று விட்டனர்.  இந்தச் சம்பவம், அப்போது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமிர்தவல்லியின் தந்தை கணேசன், எவிடென்ஸ் அமைப்புமூலம் வழக்குத் தொடுத்தார். எஸ்சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தஞ்சை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்றது.விசாரணை முடிவில் பழனியப்பன் சகோதரர்கள் சொலை செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, இந்தக் கொலைகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. துரைராஜ், சிவசுப்ரமணியன், ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது. சிவசுப்ரமணியன் 37 ஆண்டுகளும், மற்ற இருவர் 30 ஆண்டுகளும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.  இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மகேந்திரனுக்கு 3 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை வரவேற்பதாக எவிடென்ஸ் கதிர் கூறியுள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!