“ஒரு மாதத்தில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்!”- மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தில் தினகரன் ஆரூடம் | ​​​​​​​ This Government will fall in one month Says TTV Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (02/02/2018)

கடைசி தொடர்பு:21:20 (02/02/2018)

“ஒரு மாதத்தில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்!”- மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தில் தினகரன் ஆரூடம்

 

'இந்த ஆட்சி, ஒருமாத காலத்தில் முடிவுக்கு வரும்' என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

TTV

 

ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ., டி.டி.வி. தினகரன், தன் ஆதரவை வலுப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சோழவரம் பகுதியிலிருந்து இன்று மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தைத் தொடங்கினார். 

அப்போது பேசிய தினகரன், “அம்மா (ஜெயலலிதா) இருக்கும்போது தமிழ்நாடு எப்படி பாதுகாக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அவர், பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார். எம்.ஜி.ஆர் வழியில் ஆட்சி நடத்தினார். தமிழக உரிமையை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. இரும்புப் பெண்மணி போல செயல்பட்டார். காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார். நீதிமன்றம்மூலம் காவிரித் தண்ணீரைத் தடையின்றி பெற்றுத்தந்தார். இப்போது, விவசாயம் சரிவர இல்லை. விவசாயிகள் டெல்லி வரை சென்று போராடவேண்டிய நிலை உள்ளது. அம்மாவின் ஆட்சி, காவிரி டெல்டாவைப் பாதுகாக்கும்படியாக இருந்தது. 

TTVஇன்று, டெல்டா பகுதிகள் கருகுகின்றன. இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இப்போது போய் கர்நாடக முதல்வர் சித்தராமையாவைச் சந்திக்கப்போவதாகச் சொல்கிறார்கள். அம்மா மறுத்த திட்டங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். மத்திய அரசுக்கு இணக்கமாக அவர்களின் நிழல் அரசாகச் செயல்படுகிறார்கள். இந்த அரசு கலைந்தால்தான், தமிழ்நாட்டுக்கு விடிவு பிறக்கும். இந்த அரசு முடிவுக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் ஆர்.கே. நகரில் என்னை வெற்றிபெற வைத்தார்கள்.  இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அதற்கு, மக்கள் ஆதரவு தர வேண்டும்.  அதற்காகத்தான், மக்கள் சந்திப்பை என் சொந்த ஊரான சோழ மண்டலம் பகுதியிலிருந்து தொடங்குகிறேன். ஒரு மாதமே இந்த ஆட்சி நீடிக்கும்” என்றார்.