தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க முடியாதது ஏன்?- மத்திய அரசு விளக்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க முடியாதது ஏன் என்பதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

உயர்நீதிமன்றம்

 

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழை அலுவல் மொழியாக அறிவித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2006-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதற்கு இசைவு தராததால், அது அமலுக்கு வரவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா எம்.பி., இது சம்பந்தமாகக் கேள்வி எழுப்பினார். தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு அனுமதியளிக்க மத்திய அரசு சார்பில் என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன? முயற்சி எடுக்கப்படவில்லையெனில், அதற்குக் காரணம் என்ன என்று சசிகலா புஷ்பா கேட்டார். 
இதற்கு, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் பி.பி.சௌத்ரி எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பதிலில், “சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அனுமதித்து, தமிழக அரசு 2006-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியதோடு, அது சம்பந்தமாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கை, உச்ச நீதிமன்றத்துக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. 2012-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இதற்கு முன்பும், 1997 மற்றும் 1999-ம் ஆண்டுகளிலும் இதே கோரிக்கை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்ட நிலையில், மத்திய அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை ” என்று கூறியுள்ளார். 

இதற்கு முன்பும் இதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர். அப்போதும் மத்திய அரசு இதே பதிலையே தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!