இந்துக் கடவுள் பற்றி கமல்ஹாசனின் மாற்றத்துக்கு என்ன காரணம்? - வானதி சீனிவாசன் விளக்கம்

இந்துக் கடவுள்களை அவமதிக்கும் போக்கு மாறிவருவதே, கமல்ஹாசனின் மாற்றத்துக்குக் காரணம் என பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Vanthi


விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா ரத யாத்திரை இன்று ராமநாதபுரம் வந்தது. ராமநாதபுரம் வந்த இந்த ரதயாத்திரையில், பா.ஜ.க மாநில பொதுச் செயலாளரும், ரத யாத்திரைக் குழு ஒருங்கிணைப்பாளருமான வானதி சீனிவாசனும் பங்கேற்றார். 

ராமநாதபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வானதி சீனிவாசன், ''யார் மீதும் சுமையை ஏற்றாத, அனைவரையும் சொந்தக் காலில் நிற்கவைக்கக்கூடிய வகையில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக தேக்க நிலையில் இருந்து வந்த நாட்டை, மாற்றக்கூடிய நடவடிக்கையாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. விவசாயிகள், மீனவர்கள் நலனுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படும் சிரமங்களைக் கருத்தில்கொண்டு, அவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடவைக்க தேவையான பயிற்சி, கடன் வசதி, மானியம் ஆகியவற்றை அளிக்க இந்த நிதி உதவும். 

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விகுறித்து பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனாலும், தோல்விக்கான காரணம்குறித்து கட்சித் தலைமை ஆய்வுசெய்யும். எங்கள் ஆட்சிக் காலத்தைவிட காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் தமிழக மீனவர்கள் அதிகப்படியான தாக்குதலைச் சந்தித்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் அந்த நிலை மாறியிருக்கிறது. மீனவர் பிரிட்சோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தூதரக அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 

இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் எதிர்த்துப் பேசுவதே தங்கள் பணி என தமிழகத்தில் அரசியல் செய்துகொண்டிருந்த அரசியல்வாதிகளின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே, கமல்ஹாசன்  இந்துக்கள்குறித்த தனது கொள்கையினை மாற்றிக்கொண்டிருப்பது'' என்றார். வானதியுடன், மாவட்டத் தலைவர் முரளிதரன், மாவட்டச் செயலாளர் ஆத்ம கார்த்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!