“ 'மதுரை வீரன்' படத்தைப் பார்த்திருங்க சாமி!”- தே.மு.தி.க-வினர் நடத்திய வினோத ஊர்வலம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன்  நடித்த 'மதுரை வீரன்' திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. அரியலூர் மக்களை இந்தப் படத்தைப் பார்க்கவைப்பதற்காக தே.மு.தி.க-வினர் செய்த நிகழ்ச்சி, அனைவரின் புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. 

                                

'சகாப்தம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன். முதல் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.

                             

சண்முகபாண்டியனின் இரண்டாவது படமான மதுரைவீரன் படத்தை எப்படியாவது ஓட வைத்துவிட வேண்டும் என்று தலைமையிலிருந்து அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு மறைமுக உத்தரவாம். அரியலூர் மாவட்ட மக்களின் மனதில் படத்தின் பெயரைப் பதியவைக்க வேண்டும் என்பதற்காகவும்,  படத்துக்கு வரவேற்பு அளிக்கும் வகையிலும், தே.மு.தி.க-வினர் ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். 

                                      

மதுரை வீரன் போல ஒருவர் வேடம் அணிந்தும், காளை மாட்டுடன் மாவட்டத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தவர்கள், அவசியம் எல்லோரும் 'மதுரை வீரன்' படத்தைப் பாருங்கள் என்றபடி கோஷமிட்டுக்கொண்டே சென்றார்கள். வித்தியாசமான முறையில் சென்றதால், பொது மக்கள் ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டுச் சென்றார்கள். 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், திரைபடத்தைக் காண தியேட்டர்களில் குவிந்தார்கள். அரியலூர்  மாவட்ட தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் ராமஜெயவேல், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!