வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (02/02/2018)

கடைசி தொடர்பு:23:30 (02/02/2018)

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 வருடம் சிறை

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, 10 வருடம் சிறைத் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

குற்றவாளிக்கு தீர்ப்பு

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள கூவாச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் பாலியல் வன்கொடுமைசெய்துள்ளார். தொடர்ந்து அவரை மிரட்டி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்துள்ளார் முத்துப்பாண்டி. அதனால், அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி அவரது தாயார்  விசாரித்தபோது, முத்துப்பாண்டி மிரட்டிய விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

இதுதொடர்பாக முத்துப்பாண்டியை அழைத்து விசாரித்த அந்தப் பெண்ணின் தாயை கொலை செய்துவிடுவதாக மிரட்டிய முத்துப்பாண்டி, கர்ப்பத்தைக் கலைக்காவிட்டால், இருவரும் உயிரோடு இருக்க முடியாது என மிரட்டியுள்ளார். இது தொடர்பாக, அந்தப் பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து வழக்குப் பதிவுசெய்த போலீஸார், முத்துப்பாண்டியைக் கைதுசெய்தனர். இந்த வழக்கு, நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. 

அரசுத் தரப்பு வழக்கறிஞராக பால்கனி ஆஜராகி, மனுதாரர் சார்பாக வாதாடினார். குறுக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சைகை மூலமாக விளக்கினார். இந்த வழக்கில், நீதிபதி குணசேகரன் இன்று தீர்ப்பளித்தார்.  குற்றச்சாட்டு நிரூபணமானதால், முத்துப்பண்டிக்கு 10 வருடம் சிறைத்தண்டனையும் 4,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவரை போலீஸார் கைதுசெய்து பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைத்தனர்.